செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - தேசிய மனித உரிமைகள் ஆணைய 2 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது

Published On 2018-07-12 01:55 GMT   |   Update On 2018-07-12 01:55 GMT
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பேரணியில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 2 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது.
புதுடெல்லி:

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். 100-வது நாள் போராட்டத்தில் பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு கொடுப்பதாக இருந்தது. அப்போது வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியானார்கள்.

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு நேரடி கள ஆய்வில் ஈடுபட்டது. அந்த குழு அளித்த அறிக்கையில், அதிகப்படியான மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பதாக சுட்டிக்காட்டியதை அடுத்து ஆணையத்தின் 2 நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

மிக முக்கியமான வழக்குகளை மட்டும் தான் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 2 பேர் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதமே விசாரணை தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tags:    

Similar News