செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்க நிதிஷ்குமாருடன் அமித் ஷா இன்று சந்திப்பு

Published On 2018-07-12 01:12 GMT   |   Update On 2018-07-12 01:12 GMT
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, வரவுள்ள பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாரை சந்தித்து இன்று ஆலோசனை நடத்துகிறார். #BJP #AmitShah #NitishKumar
பாட்னா:

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் பாஜக கூட்டணி 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்தக் கூட்டணியில் தற்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் இணைந்துள்ளது.

இதற்கிடையே, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார்.
 
அதன் ஒரு பகுதியாக, பாஜக தலைவர் அமித் ஷா இன்று பீகார் செல்கிறார். அங்கு கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும், பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாரை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

இன்று காலை 10 மணிக்கு விமான நிலையம் வரும் அமித் ஷா, அங்கிருந்து அரசு விருந்தினர் இல்லத்துக்குச் செல்கிறார். அங்கு நிதிஷ்குமாருடன் சிற்றுண்டி அருந்துகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அமித் ஷா, இரவு நிதிஷ்குமார் வீட்டில் இரவு உணவு அருந்துகிறார்.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நித்யானந்தா ராய் கூறுகையில், அமித் ஷா கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக வளர்ந்துள்ளது. இந்தப் பயணத்தின்போது பாஜகவின் ஊடக அணியினர் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரை சந்தித்துப் பேசுகிறார் என தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் இணைந்த பிறகு அமித் ஷா பாட்னா வருவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #BJP #AmitShah #NitishKumar
Tags:    

Similar News