செய்திகள்

கேரளாவில் நிபா காய்ச்சலை கட்டுப்படுத்த உழைத்த டாக்டர்களுக்கு தங்கப்பதக்கம்

Published On 2018-06-27 09:49 GMT   |   Update On 2018-06-27 09:49 GMT
கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவிய டாக்டர்களுக்கு தங்கப்பதக்கமும் செவிலியர்களுக்கு ஊக்கத்தொகையும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. #Nipahvirus
திருவனந்தபுரம் :

கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 17 பேர் பலியாகி உள்ளனர். காய்ச்சல் பாதிப்புகளின் தாக்கத்தை உணர்ந்து மாநில அரசு எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தற்போது நிபா காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.

இந்நிலையில், தங்களது பாதுகாப்பை பொருட்படுத்தாமல் நிபா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவிய டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கேரள அரசு பரிசு மற்றும் உதவித்தொகையை அறிவித்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நான்கு உதவி பேராசிரியர்கள், 19  செவிலியர்கள், 7 செவிலியர் உதவியாளர்கள், 17 துப்புரவு ஊழியர்கள், 4 மருத்துவமனை ஊழியர்கள், 2 சுகாதார ஆய்வாளர்கள், 3 ஆய்வக நபர்கள் உள்ளிட்ட 61 பேருக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.



டாக்டர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியில் இருந்த போது நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த செவிலியர் லினிக்கு கேரள அரசின் சிறந்த செவிலியர் விருது வழங்கப்பட உள்ளது. #Nipahvirus
Tags:    

Similar News