செய்திகள்

குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி இன்று இஸ்ரேல் பயணம்

Published On 2018-06-26 14:56 GMT   |   Update On 2018-06-26 14:56 GMT
குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி ஆறுநாள் அரசுமுறை பயணமாக இன்று இஸ்ரேல் நாட்டுக்கு செல்கிறார். #GujaratCM #VijayRupani
அகமதாபாத்:

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடந்த ஜனவரி மாதம் இந்தியா வந்திருந்தபோது குஜராத் மாநிலத்துக்கு சென்றிருந்தார். அப்போது தங்கள் நாட்டுக்கு வருகை தருமாறு குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானியை அவர் கேட்டு கொண்டார்.

இதையடுத்து, ஆறுநாள் அரசுமுறை பயணமாக விஜய் ருபானி இன்று இஸ்ரேல் நாட்டுக்கு செல்கிறார். அவருடன் குஜராத் மாநில மந்திரிகள், உயரதிகாரிகள், பிரபல தொழிலதிபர்கள் கொண்ட குழுவினரும் மும்பையில் உள்ள இஸ்ரேல் துணை தூதரும் செல்கின்றனர்.

நவீன முறையிலான வேளாண்மை தொழில்நுட்பம், நீர் மேலாண்மை, உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் இஸ்ரேலில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது? என்பதை இந்த குழுவினர் பார்வையிட உள்ளனர்.

கடந்த 1980-ம் ஆண்டில் இருந்து இஸ்ரேல் நாட்டில் வாழ்ந்துவரும் பெரும்பாலான குஜராத்தியர்கள் அங்கு வைர வியாபாரம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் மந்திரி மற்றும் உடன் செல்பவர்கள் அங்குள்ள இந்தியர்களை சந்தித்து கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு மற்றும் வேளாண்மைத்துறை மந்திரி உரி ஏரியல் ஆகியோரை சந்திக்கும் விஜய் ருபானி முன்னிலையில் இருநாடுகள் இடையில் சில முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் யூதர்கள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டதை விவரிக்கும் ஜெருசலேம் அருங்காட்சியகத்தை பார்வையிடும் விஜய் ருபானி, இரண்டாம் உலகப்போரில் பங்கேற்று வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் கல்லறைகளில் மரியாதை செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #VijayRupanivisitsIsrael #VijayRupani
Tags:    

Similar News