செய்திகள்

கர்நாடக ஹஜ் பவனுக்கு அப்துல்கலாம் பெயர் - எடியூரப்பா யோசனை

Published On 2018-06-25 11:20 IST   |   Update On 2018-06-25 11:20:00 IST
பெங்களூரில் உள்ள கர்நாடக ஹஜ் பவன் கட்டிடத்துக்கு திப்பு சுல்தான் பெயருக்கு பதிலாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரை வைக்க மாநில பாரதிய ஜனதா தலைவர் எடியூரப்பா வலியுறுத்தி உள்ளார். #HajBhavan
பெங்களூர்:

பெங்களூரில் உள்ள கர்நாடக ஹஜ் பவன் கட்டிடத்துக்கு திப்பு சுல்தான் பெயர் சூட்ட முடிவு செய்து இருப்பதாக கர்நாடக ஹஜ் மற்றும் வக்ப்போர்டு மந்திரி ஜமீர் அகமதுகான் சமீபத்தில் அறிவித்தார்.

இதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ஏற்கனவே சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது திப்புசுல்தான் பிறந்த நாளை மாநில அரசு விழாவாக கொண்டாடியது. இதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. மடிகேரியில் ஒருவர் கொல்லப்பட்டார்.

தற்போது மந்திரி ஜமீரின் முடிவை ஏற்று ஹஜ் பவனுக்கு திப்புசுல்தான் பெயர் சூட்டினால் மாநில அளவில் பெரும் போராட்டம் நடத்துவோம் என்று மாநில பா.ஜனதா பொது செயலாளர் ஷோபா எச்சரித்துள்ளார்.

முன்னாள் முதல்- மந்திரியும் மாநில பா.ஜனதா தலைவருமான எடியூரப்பாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் ஹஜ் பவனுக்கு திப்புசுல்தான் பெயர் சூட்டக் கூடாது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயர் சூட்டலாம் என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி எடியூரப்பா கூறியதாவது:-


ஹஜ் பவனுக்கு திப்பு பெயர் சூட்டுவதற்கு இப்போது என்ன அவசரம். மந்திரி ஜமீர் தேவையில்லாமல் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கப் பார்க்கிறார். ஹஜ் பவன் நான் முதல் மந்திரியாக இருந்த போது கட்டப்பட்டது. அந்த கட்டிடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரை சூட்டுவது தான் பொருத்தமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே காங்கிரசை சேர்ந்த துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா கூறுகையில் ஹஜ் பவனுக்கு திப்பு சுல்தான் பெயர் வைப்பது தொடர்பாக அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றார்.#HajBhavan #AbdulKalam #APJAbdulKalam #BSYeddyurappa
Tags:    

Similar News