செய்திகள்

ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு என்ன செய்யலாம்? அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆளுநர் ஆலோசனை

Published On 2018-06-22 12:47 GMT   |   Update On 2018-06-22 12:47 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன் ஆளுநர் இன்று ஆலோசனை நடத்தினார். #JammuKashmir #Vohra #JKAllPartyMeet
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், பி.டி.பி கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக சமீபத்தில் விலக்கிக் கொண்டது. இதனால், பி.டி.பி. கட்சி தலைவர் மெகபூபா முப்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மாநில ஆளுநர் வோரா அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. ஆளுநரின் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மெகபூபா முப்தி பங்கேற்றார். இதேபோல் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.ஏ.மிர்,  பா.ஜ.க. தலைவர் சாத் சர்மா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், காஷ்மீரில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மாநிலத்தில் அமைதி நிலவுவதற்கு என்ன செய்யலாம்? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. தனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்ற முடியாத வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் மெகபூபா வலியுறுத்தினார். 

ஆளுநர் என்.என்.வோராவின் பதவிக்காலம் வரும் 25-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனினும் மறு உத்தரவு வரும் வரையில் அவர் பதவியில் நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. #JammuKashmir #Vohra #JKAllPartyMeet
Tags:    

Similar News