செய்திகள்

டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு பதிலடி - அமெரிக்க பொருள்களுக்கு சுங்க வரியை அதிகரித்த இந்தியா

Published On 2018-06-21 20:33 GMT   |   Update On 2018-06-21 20:33 GMT
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்களுக்கு இந்தியா சுங்க வரியை அதிகரித்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. #Indiaresponse #UStariffs
புதுடெல்லி:

உலக நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களுக்கும் இதர தயாரிப்புகளுக்கான வரியை டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பன்மடங்காக உயர்த்தியுள்ளது.

இதன் காரணமாக உலக வர்த்தகம் சீர்குலையக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், வட அமெரிக்காவின் தாராளமய வர்த்தக கொள்கை உடன்பாட்டில் இருந்து வெளியேறப் போவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதனால், சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் இதர நாட்டு தலைவர்களுடன் டிரம்ப்புக்கு கருத்து மோதல் ஏற்பட்டு, அந்த மாநாட்டின் பாதியில் டிரம்ப் வெளியேறும் நிலை ஏற்பட்டது.

சமீபத்தில் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 5 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான 800 பொருட்களுக்கு அமெரிக்க அரசு தற்போது கூடுதல் வரி விதித்துள்ளது. 

இதேபோல், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் மற்றும் ஸ்டீல் மீதான சுங்க வரியை அமெரிக்க அரசு சமீபத்தில் உயர்த்தியது. 

இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்கள் மீதான சுங்க வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்களுக்கு சுங்க வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை சுண்டல் போன்ற பொருட்களுக்கு 60 சதவீதமும், பயறு வகைகளுக்கு 30 சதவீதமும், போரிக் ஆசிட் மீதான வரி 7.5 சதவீதமும், அர்திமீயா எனப்படும் இறால் மீன் வகைகள் மீதான வரி 15 சதவீதமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இரும்பு, எஃகு பொருட்கள், ஆப்பிள்கள், முத்துகள் உள்ளிட்ட சில பொருட்கள் மீதான சுங்க வரியும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இது ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என தெரிவித்துள்ளனர். #Indiaresponse #UStariffs
Tags:    

Similar News