செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது

Published On 2018-06-20 02:50 GMT   |   Update On 2018-06-20 02:50 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததையடுத்து, கவர்னர் ஆட்சியை அமல்படுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். #JKGovernorRule #KashmirGovernorRule
ஜம்மு:

காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால், சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்து வந்த நிலையில், நேற்று பகிரங்கமாக வெடித்தது.

காஷ்மீர் மாநில சட்டசபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் டெல்லி வரும்படி பா.ஜ.க. தலைவர் அமித் ஷா அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி நேற்று எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. அறிவித்தது.

தேசிய அரசியலில் பெரும் திருப்புமுனையாக கருதப்படும் இந்த அறிவிப்புக்கு பின்னர் தனது முதல் மந்திரி பதவியை மெகபூபா முப்தி உடனடியாக ராஜினாமா செய்தார். ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கப்போவதில்லை என்று பா.ஜ.க.வும் அறிவித்துவிட்டது.



புதிய அரசு அமையும் சூழ்நிலை இல்லாததால்,  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த அனுமதிக்குமாறு ஜனாதிபதி மாளிகைக்கு கவர்னர் வோரா பரிந்துரை கடிதம் அனுப்பினார். இந்த பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இன்று முதல் ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. #JKGovernorRule #KashmirGovernorRule #BJPDumpsPDP

Tags:    

Similar News