செய்திகள்

எத்தனை பாஸ்போர்ட் கொடுத்துள்ளோம் என்ற கணக்கு இல்லை - அதிர வைத்த வெளியுறவு அமைச்சகம்

Published On 2018-06-18 15:20 GMT   |   Update On 2018-06-18 15:20 GMT
கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்டுள்ளது என்ற ஆர்.டி.ஐ கேள்விக்கு, அதற்கான ஆவணங்களை பராமரிக்கவில்லை என வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #MEA #RTI
புதுடெல்லி:

தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலரும், மத்திய தகவல் ஆணையத்தின் முன்னாள் ஆணையராக இருந்தவருமான ஷைலேஷ் காந்தி, வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகத்திற்கு சில கேள்விகளை தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மூலம் கேட்டிருந்தார். 

அதில், கடந்த ஐந்து ஆண்டுகளில் விநியோகிக்கப்பட்ட பாஸ்போர்ட்கள் எத்தனை?, அதன் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் எவ்வளவு?, தனியார் நிறுவனங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கும் பணி மேற்கொண்டால், அந்நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட தொகை எவ்வளவு? ஆகிய கேள்விகளை ஷைலேஷ் காந்தி கேட்டிருந்தார்.

மேற்கண்ட கேள்விகளுக்கு, வெளியுறவு அமைச்சகத்தின் தலைமை பொது தகவல் அதிகாரி கடந்த 15-ம் தேதி பதில்களை அனுப்பியுள்ளார். அதில், பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்ட ஆவணங்கள் பராமரிக்கப்படவில்லை எனவும் மற்ற கேள்விகளுக்கு ஒரு குறிப்பிட்ட விதியை சுட்டிக்காட்டி பதில் தெரிவிக்க முடியாது என பதிலளிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்களின் ரகசியம் பாதிக்கப்படும் என்றாலோ, பொதுமக்களின் தகவல்கள் கசியும் என்றாலோ சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் பதிலளிக்க தேவையில்லை என்பது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் உள்ள ஒரு அம்சமாகும். இந்த அம்சத்தை பயன்படுத்தி மேற்கண்ட கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சகம் அவ்வாறு பதிலளித்துள்ளது.

மாறாக, கடந்த 2015-ம் ஆண்டு மனோரஞ்சன் ராய் என்பவர் 2012 முதல் 2013 வரை விநியோகிக்கப்பட்ட பாஸ்போர்ட் தகவல்களுக்கு, 2012-ல் 73,89,558 பாஸ்போர்ட்கள் மற்றும் 2013-ல்  58,17,515 பாஸ்போர்ட்கள் விநியோகிக்கப் பட்டுள்ளது என வெளியுறவு அமைச்சகம் முறையான பதிலை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News