செய்திகள்

கெஜ்ரிவால் போராட்டத்திற்கு எதிராக உண்ணாவிரதம் தொடங்கிய பா.ஜ.க. தலைவர்கள்

Published On 2018-06-15 12:57 GMT   |   Update On 2018-06-15 12:57 GMT
டெல்லியில் ஆளுநர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கெஜ்ரிவாலுக்கு எதிராக, பா.ஜ.க. தலைவவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #KejriwalProtest #DelhiBJP #AAPProtest #DelhiBJPHungerStrike
புதுடெல்லி:

டெல்லியில் ஐஏஸ் அதிகாரிகள் மாநில அரசுக்கு ஒத்துழைக்காமல் நடத்தி வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி, முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் டெல்லி துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் இன்று  5-வது நாளாக  நீடிக்கிறது. ஆனால் அவர்களின் கோரிக்கை குறித்து ஆளுநர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. 

டெல்லி அரசின் செயல்பாடு முடங்கியிருப்பதற்கு மத்திய அரசும் துணை நிலை ஆளுநரும் காரணம் என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய பா.ஜ.க. அரசு தூண்டி விடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார் 

இது ஒருபுறமிருக்க, கெஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களின் போராட்டத்திற்கு எதிராக பா.ஜ.க. தலைவர்கள் போட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைமைச்செயலகத்தில் பா.ஜ.க. தலைவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இன்று காலை முதல் பா.ஜ.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமைச் செயலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

மேற்குடெல்லி பா.ஜ.க. எம்.பி. பிரவேஷ் சிங் சாகிப் வர்மா. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் விஜேந்தர் குப்தா, மன்ஜிந்தர் சிங் சிர்சா எம்.எல்.ஏ.வுடன் இணைந்து உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்ததாக ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா எம்.எல்.ஏ. கூறினார்.

மேலும் போராட்டத்தை கைவிடும்படி கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடக்கோரி ஜனாதிபதி ராம் நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் மிஸ்ரா கூறினார்.

இவ்வாறு போட்டி போட்டுக்கொண்டு இரு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருவதால் டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #KejriwalProtest #DelhiBJP #AAPProtest #DelhiBJPHungerStrike 
Tags:    

Similar News