செய்திகள்

எதிர்க்கட்சிகளின் வகுப்புவாத அரசியலாலேயே பா.ஜ.க.வுக்கு பின்னடைவு - நிதின் கட்காரி

Published On 2018-06-03 09:19 IST   |   Update On 2018-06-03 09:19:00 IST
சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகளின் வகுப்புவாத அரசியலாலேயே பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார். #BJP #NitinGadkari
நாக்பூர்:

மத்தியில் பா.ஜனதா கட்சி ஆட்சி அமைத்து 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அக்கட்சி சார்பில் நாடு முழுவதும் மத்திய அரசின் சாதனைகள் தொடர்பாக பொதுமக்கள் இடையே பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் 4 ஆண்டு ஆட்சியின் சாதனைகள் குறித்து நாக்பூரில் நிருபர்களை சந்தித்த மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது:-

விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காமை, பால் விலை வீழ்ச்சி உள்பட பல்வேறு பிரச்சினைகளால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். விவசாயிகளின் தற்போதைய பிரச்சினைகள் எதுவும் புதிதானவை அல்ல, ஏற்கனவே இருப்பவைதான். இவற்றுக்கு சர்வதேச பொருளாதார மந்தநிலை மற்றும் விவசாயிகளின் அதிகப்படியான உற்பத்தி ஆகியவையே காரணம்.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண நீண்ட மற்றும் குறுகிய கால திட்டங்கள் வகுத்து போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அரசு செயல்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளின் உற்பத்தி செய்யும் உபரி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


இதைத்தொடர்ந்து சமீபத்தில் 11 மாநிலங்களில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மந்திரி நிதின் கட்காரி, எதிர்க்கட்சியினர் அரசியல் காரணங்களுக்காக வேண்டுமென்றே மத்திய அரசு குறித்து தவறான தகவல்கள் பரப்பி வருவதாகவும், இதன் மூலம் சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் இடையே பயத்தை விதைத்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் பா.ஜனதா ஒருபோதும் சாதி, மதம் மற்றும் மொழி ஆகியவற்றை பயன்படுத்தி பிரிவினை அரசியலில் ஈடுபடாது எனவும் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் வகுப்புவாத அரசியலாலேயே பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். #BJP #NitinGadkari
Tags:    

Similar News