செய்திகள்

டெல்லியில் ரப்பர்-பிளாஸ்டிக் குடோன் தீ விபத்து

Published On 2018-05-30 08:28 GMT   |   Update On 2018-05-30 08:30 GMT
தெற்கு டெல்லியில் ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி:

தெற்கு டெல்லியின் மால்வியாநகர் பகுதியில் ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் குடோன் உள்ளது. இதன் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி நேற்று மாலை திடீர் என்று தீப்பிடித்தது.

தீ மளமள வென்று எரிந்தது. அருகில் இருந்த குடோனுக்குள் பரவியது. அதில் இருந்த ரப்பர் மற்றும் பிளாஸ்டிக்குகள் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தன. இதனால் தீ அணைக்க முடியாத அளவுக்கு விடிய விடிய எரிந்து கொண்டே இருந்தது.

தீயணைப்பு படை வீரர்கள் 25 வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். என்றாலும் தொடர்ந்து தீ புகை மூட்டத்துடன் எரிந்து கொண்டே இருந்தது. டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் புகை பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்று மேலும் 10 தீயணைப்பு வாகனங்களும் விமானப்படை ஹெலிகாப்டரும் தீயணைக்கும் பணிக்கு உதவிக்கு வரவழைக்கப்பட்டது. 16 மணி நேரத்துக்கும் மேல் பற்றி எரிந்த தீ இன்று காலை கட்டுப்படுத்தப்பட்டது என்றாலும் தொடர்ந்து புகை மூட்டம் வந்து கொண்டே இருந்தது.

அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த தீயில் யாருக்கும் காயம் இல்லை என்றாலும் கடும் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். #tamilnews

Tags:    

Similar News