செய்திகள்

நாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார்

Published On 2018-05-27 10:45 IST   |   Update On 2018-05-27 10:45:00 IST
தலைநகர் டெல்லியை உ.பி மாநிலத்தின் மீரட் நகருடன் இணைக்கும் 135 கி.மீ நீளமுள்ள இந்தியாவில் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். #delhimeerutexpressway #smarthighway
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் வரை, ரூ.11,000 கோடி செலவில் ஸ்மார்ட் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதுவே நாட்டின் முதல் ஸ்மார்ட் மற்றும் பசுமை வழிச் சாலை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாலையின் முதல்கட்ட பாதையை இன்று காலை பொத்தானை அழுத்தி, திறந்து வைத்த பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணம் செய்தார். இதனைத் தொடர்ந்து, திறந்த ஜீப்பில் இந்த சாலை வழியே பயணம் செய்தார். சாலையின் இருபுறத்திலும் திரண்டிருந்த மக்கள் பிரதமரை பார்த்து உற்சாகமாக கைகளை அசைத்து வாழ்த்து தெரிவித்தனர்.



மொத்தம் 135 கி.மீ நீளம் கொண்ட இந்த சாலையில், ஒவ்வொரு 500 மீட்டருக்கும் மழைநீர் சேமிப்பு வசதி உள்ளது. வழிநெடுகிலும் உள்ள விளக்குகள் சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.



வாகனங்களின் வேகத்தை கேமராக்கள் மூலம் கணக்கிட்டு, அதிவேக வாகனங்களுக்கு தானாக அபராத ரசீது வழங்கப்படுகிறது. மேலும், இந்த சாலையில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் வசதியும் உள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட் நெடுஞ்சாலை வழியாக  டெல்லியில் இருந்து 85 கி,மீ தூரத்தில் உள்ள மீரட் நகரை 45 நிமிட பயண நேரத்தில் சென்றடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது. #delhimeerutexpressway #smarthighway
Tags:    

Similar News