செய்திகள்
கோப்புப்படம்

காஷ்மீரில் ராணுவத்தின் இப்தார் விருந்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வீச்சு - போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு

Published On 2018-05-22 09:59 GMT   |   Update On 2018-05-22 09:59 GMT
ஜம்மு காஷ்மீரில் ராணுவம் சார்பில் நடந்த இப்தார் விருந்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 சிறுமிகள் காயம் அடைந்தனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் மீது காவல்துறையும் ராணுவமும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ராணுவத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் கல்வீச்சிலும் ஈடுபடுகின்றனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பெல்லட் குண்டுகளை பாதுகாப்பு படையினர் பயன்படுத்தி தாக்குதல் நடத்துகின்றனர்.

இந்நிலையில், ரம்ஜான் மாதம் பிறந்துள்ளதால் அனைத்து பகுதிகளிலும் இப்தார் விருந்து நடத்தப்படுகிறது. அவ்வகையில் சோபியான் மாவட்டம் தார்தி காலி போரா கிராமத்தில் உள்ள மசூதியின் அருகில் நேற்று இரவு  ராணுவம் சார்பில் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மசூதியில் தொழுகை முடிந்து திரும்பியவர்கள், ராணுவத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். பின்னர், ராணுவத்தின் இப்தார் விருந்திற்கு எதிராக  போராட்டம் நடத்த அனைவரும் திரண்டு வரும்படி மசூதியில் இருந்து அழைப்பு விடுத்தனர்.

இதனையடுத்து அங்கு ஏராளமான மக்கள் அங்கு ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அவர்களில் சிலர் ராணுவத்தினரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் இப்தார் விருந்துக்கு இடையூறு ஏற்பட்டது.

எனவே, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தினர். இதில் 4 சிறுமிகளுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 
Tags:    

Similar News