செய்திகள்

நீதிபதி லோயா மரணத்தில் நீதி விசாரணை - சுப்ரீம் கோர்ட்டில் மும்பை வக்கீல்கள் சீராய்வு மனு

Published On 2018-05-21 15:18 IST   |   Update On 2018-05-21 15:18:00 IST
சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி லோயா மரணத்தில் சுதந்திரமான விசாரணைக்கு அனுமதி மறுத்த சுப்ரீம் கோர்ட்டில் மும்பை வக்கீல்கள் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்தனர். #JudgeLoya
புதுடெல்லி:

குஜராத் மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டில் சொராபுதின் ஷேக் உள்பட 3 பேர் போலி என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டதாக, தற்போதைய பா.ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை, மும்பை சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி பி.எச்.லோயா, கடந்த 1-12-2014 மராட்டிய மாநிலம் நாக்பூரில் திருமண விழாவுக்கு சென்றிருந்தபோது, மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

நீதிபதி லோயா மரணத்தில் மர்மம் நீடிப்பதால் இதுகுறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, காங்கிரஸ் பிரமுகர் தெசீன் பூனவாலா, பத்திரிகையாளர் பி.ஆர்.லோன் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

நீதிபதி லோயா மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த கூடாது என மகாராஷ்டிரா மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரணை நடைபெற்று வந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க மறுப்பதாகவும், மனுக்களை தள்ளுபடி செய்வதாகவும் கடந்த 19-4-2018 அன்று அறிவித்தனர்.

இந்நிலையில், நீதிபதி லோயா மரணத்தில் சுதந்திரமான விசாரணைக்கு அனுமதி மறுத்த சுப்ரீம் கோர்ட்டில் மும்பை வக்கீல்கள் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். #CBIjudgeBHLoya #BombayLawyersAssociation #SC
Tags:    

Similar News