செய்திகள்

வாரணாசியில் மேம்பால விபத்து - அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு

Published On 2018-05-18 12:19 IST   |   Update On 2018-05-18 12:19:00 IST
உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் கட்டுமான பணியில் இருந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்த விபத்து குறித்து ராஜன் மிட்டால் உட்பட 7 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். #YogiAdityanath
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள ராணுவ கண்டோன்மன்ட் பகுதியில் சாலை மேம்பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், கடந்த வாரம் இந்த பாலத்தின் ஒரு பகுதி பயங்கரமாக இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் பாலத்தின் கீழ் பகுதியில் நின்றிருந்த பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி கொண்டன.

இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த விபத்து குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் குழு தங்கள் அறிக்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் நேற்று தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் 7 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக உ.பி மேம்பால கட்டுமான நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ராஜன் மிட்டால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

தற்போது ராஜன் மிட்டால், முதன்மை திட்ட மேலாளர் தெவாரி, திட்ட மேலாளர் சுதன், துணை பொறியாளர் ராஜேஷ் சிங், பொறியாளர் லால் சந்த், முன்னாள் திட்ட மேலாளர் ஜெண்டா லால் மற்றும் கூடுதல் திட்ட மேலாளர் ராஜேஷ் பால் ஆகிய 7 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 2 லட்ச ரூபாயும் நிதி வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #Varanasiflyovercollapse #YogiAdityanath
Tags:    

Similar News