செய்திகள்

நவ்ஜோத்சிங் சித்து ஒரு வழக்கில் குற்றவாளி, மற்றொரு வழக்கில் விடுதலை - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

Published On 2018-05-15 06:22 GMT   |   Update On 2018-05-15 06:22 GMT
1988-ம் ஆண்டு சாலையில் சண்டையிட்டு முதியவரை தாக்கிய வழக்கில் பஞ்சாப் மந்திரி நவ்ஜோத்சிங் சித்து குற்றவாளி என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. #NavjotSinghSidhu
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பஞ்சாப் மந்திரியுமான நவ்ஜோத்சிங் சித்து, கடந்த 1988-ம் ஆண்டு
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள சாலையில் குர்னம் சிங், என்பவருடன் ஏற்பட்ட சண்டையில், அவரது தலையில், நவ்ஜோத் சிங் சித்து பலமாக தாக்கினார்.

இதில் படுகாயமடைந்த, குர்னம் சிங், சில நாட்களுக்கு பின் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த பாட்டியாலா கோர்ட், சித்துவை விடுவித்தது. இருப்பினும், மேல்முறையீடு செய்யப்பட்டதில் அரியானா ஐகோர்ட் 2007-ம் ஆண்டு, சித்துவை குற்றவாளி என அறிவித்தது. அவருக்கு, மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும்,ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து சித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், எஸ்.கே கவுல் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்கப்பட்டதாக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து சித்து விடுவிக்கப்பட்டார்.

அதே வேளையில், கொடூரமாக தாக்கப்பட்டதாக அவர் மீது உள்ள வழக்கில் சித்து குற்றவாளி என நீதிபதிகள் அறிவித்தனர்.  
அவருக்கான தண்டனை விபரங்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

முன்னதாக, கடந்த மாதம் 14-ம் தேதி வழக்கு விசாரணையின் போது, “சித்துவுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் தவறு இல்லை” என பஞ்சாப் மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News