செய்திகள்

கேரளாவில் வடமாநில தொழிலாளிக்கு ரூ.60 லட்சம் லாட்டரி பரிசு

Published On 2018-05-11 04:30 GMT   |   Update On 2018-05-11 04:30 GMT
கேரள அரசின் காருண்யா பாக்கியலட்சுமி லாட்டரியை வாங்கிய வடமாநில தொழிலாளிக்கு முதல் பரிசான ரூ.60 லட்சம் கிடைத்துள்ளது. #Kerala #Lottery
திருவனந்தபுரம்:

கேரள அரசு லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இந்த லாட்டரி விற்பனை மூலம் கிடைக்கும் பணம் அரசின் நலத்திட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பத்தேரி பகுதியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து கூலி தொழிலாளர்களாக பணி செய்து வருகிறார்கள். இவர்களில் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் விஸ்வஜித்ராய். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் அங்கு தொழில் நலிவடைந்ததால் கேரளாவில் தங்கியிருந்து கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

இவருக்கு லாட்டரிச்சீட்டு வாங்கும் பழக்கம் உண்டு. சமீபத்தில் இவர் கேரள அரசின் காருண்யா பாக்கியலட்சுமி லாட்டரியை வாங்கி இருந்தார்.

சமீபத்தில் இதன் குலுக்கல் நடந்தது. இதில் விஸ்வஜித்ராய் வாங்கிய லாட்டரிச்சீட்டுக்கு முதல் பரிசான ரூ.60 லட்சம் கிடைத்தது. இதுபற்றி விஸ்வஜித்ராய் கூறியதாவது:-

எனது தாய், தந்தையர் ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனது சகோதரிக்கு மட்டும் திருமணம் நடந்துள்ளது. ஊரில் விவசாயம் சரிவர நடைபெறாததால் நான் கேரளாவுக்கு வந்து கட்டிட தொழில் செய்து வந்தேன்.

பல ஆண்டுகளாக நான் லாட்டரிச்சீட்டுகள் வாங்கி வருகிறேன். இதுவரை பரிசு எதுவும் எனக்கு கிடைத்தது இல்லை. தற்போது முதல் பரிசு ரூ.60 லட்சம் கிடைத்து உள்ளது. முதலில் என்னால் அதை நம்பமுடியவில்லை. அருகில் உள்ள லாட்டரி ஏஜென்டிடம் எனது லாட்டரிச் சீட்டை காண்பித்து உறுதி செய்துகொண்டேன். லாட்டரி பரிசு பணம் மூலம் எங்கள் ஊரில் சொந்தமாக வீடு கட்டுவேன். மேலும் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளேன். எனது சகோதரி மற்றும் உறவினர்களுக்கும் உதவிகள் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார். #Kerala #Lottery
Tags:    

Similar News