செய்திகள்

உ.பி.யில் 10-ம் வகுப்பு தேர்வில் 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேறவில்லை

Published On 2018-05-01 08:24 GMT   |   Update On 2018-05-01 08:24 GMT
உத்தரபிரதேசத்தில் நேற்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட வெற்றி பெறவில்லை.
ஆக்ரா:

இந்திய அளவில் அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும் மாநிலம் உத்தர பிரதேசம். இப்போது கல்வியில் அதிர்ச்சியுடன் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.

இதில் 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட வெற்றி பெறவில்லை. இந்த பள்ளிகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகும். இதில் பெரும்பாலான பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்களே பொதுத்தேர்வு எழுதி இருந்தார்கள்.

அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 72.29. அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 71.55. இது மாநில தேர்வு சதவீதத்தை விட குறைவு.

ஆக்ரா மாவட்ட கல்வி அதிகாரி வினோத்குமார் ராய் கூறும்போது, “ஆக்ரா கல்வி மாவட்டத்தில் 9 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட வெற்றி பெறவில்லை. 7 பள்ளிகளில் தேர்வு சதவீதம் பூஜ்யம்.

அதே போல் 2 பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்வு சதவீதம் பூஜ்யம். முந்தைய ஆண்டுகளில் இதே போன்ற புள்ளி விபரங்கள் சேகரிப்பது இல்லை. முதல் முதலாக இந்த ஆண்டுதான் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

உ.பி.யில் தாய்மொழி இந்தி. மேலும் இந்தி கட்டாய பாடமாகவும் இருக்கிறது. ஆனாலும் 10-ம் வகுப்பில் 3 லட்சத்து 38 ஆயிரத்து 776 பேரும், 12-ம் வகுப்பில் 7 லட்சத்து 81 ஆயிரத்து 276 பேரும் இந்தி பாடத்தில் தோல்வி அடைந்து இருக்கிறார்கள்.

இந்தியை தவிர ஆங்கிலம், சமஸ்கிருதம், கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களில் அதிக அளவில் மாணவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் 80.8 சதவீதம் பேரும், உருதில் 91 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். ஆனால் தாய் மொழியான இந்தியில் 79.2 சதவீதம் பேர் மட்டுமே வெற்றி அடைந்துள்ளார்கள்.
Tags:    

Similar News