செய்திகள்

ஏர்செல் முன்னாள் அதிபர் நிறுவனங்கள் மீது ரூ.600 கோடி கடன் மோசடி வழக்கு பதிவு

Published On 2018-04-27 00:14 GMT   |   Update On 2018-04-27 00:14 GMT
ஏர்செல் முன்னாள் அதிபரின் 2 நிறுவனங்கள் மீது ரூ.600 கோடி கடன் மோசடி வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சென்னை உள்பட 50 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
புதுடெல்லி:

ஏர்செல் முன்னாள் அதிபரின் 2 நிறுவனங்கள் மீது ரூ.600 கோடி கடன் மோசடி வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சென்னை உள்பட 50 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.

தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல்லின் முன்னாள் அதிபர் சிவசங்கரன். பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகளில் உள்ள அக்சல் சன்ஷைன் லிமிடெட், பின்லாந்து நாட்டில் வின் விண்ட் ஓய் ஆகிய நிறுவனங்கள் இவருக்கு சொந்தமானவை ஆகும்.

அந்த நிறுவனங்களின் பெயரில், கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், பொதுத்துறை வங்கியான ஐ.டி.பி.ஐ. வங்கியில் சிவசங்கரன் ரூ.530 கோடி கடன் வாங்கினார். அந்த கடனை திருப்பிச் செலுத்தாததால், அது வாராக்கடன் ஆகி, கடன் தொகை ரூ.600 கோடியாக உயர்ந்துவிட்டது.

இந்த கடன் மோசடி தொடர்பாக சிவசங்கரனின் மேற்கண்ட 2 நிறுவனங்கள் மீதும், அவற்றில் பணியாற்றிய தலைவர், இயக்குனர்கள் உள்ளிட்ட 24 அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. குற்றச்சதி, ஏமாற்றுதல், ஊழல் ஆகியவை தொடர்பான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கடன் மோசடியில், ஐ.டி.பி.ஐ. வங்கியில் பணியாற்றிய அதிகாரிகளும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. அதனால், ஐ.டி.பி.ஐ. வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்த கிஷோர் கரத் (தற்போது, இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனராக உள்ளார்), துணை நிர்வாக இயக்குனராக இருந்த மெல்வின் ரெகோ (தற்போது, சிண்டிகேட் வங்கி நிர்வாக இயக்குனராக உள்ளார்) உள்பட 15 உயர் அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ஐ.டி.பி.ஐ. வங்கி முன்னாள் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது.

சென்னை, டெல்லி, பரிதாபாத், மும்பை, காந்திநகர், பெங்களூரு, பெல்காம், ஐதராபாத், ஜெய்ப்பூர், புனே ஆகிய நகரங்களில் சுமார் 50 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. 
Tags:    

Similar News