செய்திகள்

ஐதராபாத் விமானத்தில் தீ விபத்து- நடிகை ரோஜா உயிர் தப்பினார்

Published On 2018-03-29 02:21 GMT   |   Update On 2018-03-29 06:49 GMT
ஐதராபாத் விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தின் டயர் வெடித்து தீவிபத்துக்குள்ளானதில் நடிகை ரோஜா உட்பட 70 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நடிகை ரோஜா. இவர், நேற்று இரவு 8.55 மணிக்கு திருப்பதியில் இருந்து ஐதராபாத் செல்லும் இண்டிகோ 6இ-7117 என்ற விமானத்தில் சென்றார்.

விமானம், இரவு 10.25 மணிக்கு ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, விமானத்தில் டயர் திடீரென வெடித்தது. இதனால், டயர் வெடித்த இடத்தில் இருந்து நெருப்பு வெளியேறியது.

நடிகை ரோஜாவும் விமானத்தில் இருந்த 70 பயணிகளும் பதட்டமடைந்தனர். இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகளுக்கு அவசர தகவல் அனுப்பப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ஓடு தளத்தில் விமானம் தரையிறங்கிய உடன், தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். பிறகு, நடிகை ரோஜா உள்பட பயணிகள் அனைவரையும் பத்திரமாக கீழே இறக்கினர்.


அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகை ரோஜா உள்பட அனைத்து பயணிகளும் பதட்டமடைந்த நிலையில் விமான நிலையத்தை விட்டு புறப்பட்டு சென்றனர். தீ விபத்து காரணமாக, ஓடுதளம் மூடப்பட்டது.

இதனால் 5 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. இச்சம்பவத்தால் ஐதராபாத் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

ஏழுமலையானின் கருணையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக நான் உயிர் தப்பியுள்ளேன் என்று நடிகை ரோஜா கூறினார். #RajivGandhiInternationalAirport #indigoplane #Tamilnews
Tags:    

Similar News