செய்திகள்

நாகலாந்தில் நெய்பியு ரியோ தலைமையில் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு

Published On 2018-03-04 11:44 GMT   |   Update On 2018-03-04 11:44 GMT
நாகலாந்து மாநில தேர்தலில் கூட்டணியுடன் சேர்ந்து 32 எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி தலைமையிலான ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார்.
கோஹிமா:

நாகாலாந்தில் (போட்டியின்றி வெற்றி பெற்றவரையும் சேர்த்து) மொத்தம் உள்ள 60 இடங்களில் ஆளும் நாகா மக்கள் முன்னணிக்கு 27 இடங்களும், பாரதிய ஜனதாவுக்கு 12 இடங்களும், அதன் கூட்டணி கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சிக்கு 17 இடங்களும் கிடைத்தன. தேசிய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், ஐக்கிய ஜனதாதளத்துக்கு ஒரு இடமும் கிடைத்தன. ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.

நாகாலாந்தில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 31 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் தலைவர் நெய்பியு ரியோ மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர் ராம் மாதவ் உள்ளிட்டோர் இன்று பிற்பகல் கவர்னர் மாளிகைக்கு சென்றனர்.

நெய்பியு ரியோ தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தையும் தங்களுக்கு ஆதரவாக உள்ள 32 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலையும் கவர்னர் பி.பி. ஆச்சார்யாவிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி தலைவர் நெய்பியு ரியோவிடம் இருப்பதாகவும், அவர் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் கவர்னர் பி.பி. ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News