செய்திகள்

ஒரியண்டல் வங்கியில் ரூ.109 கோடி மோசடி - பஞ்சாப் முதல்வர் மருமகன் உள்பட 13 பேர் மீது வழக்கு

Published On 2018-02-26 13:39 IST   |   Update On 2018-02-26 13:49:00 IST
சர்க்கரை ஆலை நிறுவனத்துக்கு ஒரியண்டல் வங்கியில் இருந்து கடன் வழங்கியதில் ரூ.109 கோடி மோசடி நடந்திருப்பதால் பஞ்சாப் முதல்-மந்திரி மருமகன் உள்பட 13 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. #OBCSCAM #OBCFraud
புதுடெல்லி:

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா பொதுத் துறை வங்கிகளிடம் வாங்கிய ரூ.8 ஆயிரம் கோடி கடனை செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி சென்றார்.

அதைத்தொடர்ந்து பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அவரும் வெளிநாடு தப்பி சென்றுவிட்டார்.

நிரவ் மோடியை தொடர்ந்து ‘ரோட்டோ மேக்‘ பேனா கம்பெனி அதிபர் விக்ரம் கோத்தாரி 6 வங்கிகளில் ரூ.3695 கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த விவகாரம் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அவரை சி.பி.ஐ. கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக ஒரியண்டல் பாங்க் ஆப் காமர்சிடம் மோசடி நடந்தது தெரிய வந்தது. வைர நகை ஏற்றுமதியாளரான துவாரகா தாஸ் மற்றும் அவரது நண்பர்கள் ரூ389 கோடி திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து துவாரகா தாஸ் மற்றும் அவரது வியாபார நண்பர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஒரியண்டல் பாங்க் ஆப் காமர்சில் 2-வது மோசடி நடந்தது தற்போது வெளியே தெரிய வந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காசியாத்தை சேர்ந்த சிம்போஹோலி சர்க்கரை ஆலை நிறுவனம் இந்த வங்கியிடம் ரூ.109.08 கோடி கடன் வாங்கி இருந்தது. இந்த கடனை திருப்பி செலுத்தாமல் அந்த நிறுவனம் மோசடி செய்தது. பணத்தை திருப்பி செலுத்தாதது தொடர்பாக வங்கி அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இந்த ஆலை நிறுவனத்துக்கு ஏற்கனவே ரூ.97.85 கோடி கடன் கொடுக்கப்பட்டது. இந்த கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தது 2015-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அதே சர்க்கரை ஆலை நிறுவனத்துக்கு 2016-ம் ஆண்டு நவம்பர் 29-ந்தேதி ரூ.110 கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மோசடி செய்த அந்த நிறுவனத்துக்கு பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் 2-வது முறையாக கடன் கொடுக்கப்பட்டது. அதாவது உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த 3-வது வாரத்தில் இந்த லோன் சிம்போ ஹோலி சர்க்கரை ஆலை நிறுவனத்துக்கு ஒரியண்டல் வங்கி வழங்கி இருந்தது. அந்த நிறுவனம் இந்த கடனையும் செலுத்தாமல் ரூ.110 கோடியை மோசடி செய்தது தெரிய வந்தது.

இந்த சர்க்கரை ஆலை நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனராக பஞ்சாப் காங்கிரஸ் முதல்- மந்திரி அம்ரீந்தர் சிங்கின் மருமகன் குர்பால்சிங் உள்ளார்.

இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

இதுதொடர்பாக சர்க்கரை ஆலையின் இயக்குனர் குர்மித்சிங்மான், துணை நிர்வாக இயக்குனர் குர்பால் சிங், தலைமை நிர்வாக அதிகாரி ராவ், தலைமை நிதி அதிகாரி சஞ்சய் அபரியா உள்பட 13 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

ரூ.110 கோடி வங்கி கடன் மோசடி தொடர்பாக டெல்லி, உத்தரபிரதேசத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதற்கிடையே இந்த மோசடி தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 17-ந்தேதியே வங்கி அதிகாரிகள் புகார் கொடுத்து விட்டதாகவும், தற்போதுதான் வழக்குப் பதிவு செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. #OBCSCAM #OBCFraud

Similar News