செய்திகள்

நடுவானில் தொழில்நுட்ப கோளாறு- புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த கோஏர் விமானம்

Published On 2018-02-24 12:53 IST   |   Update On 2018-02-24 12:53:00 IST
ஜம்முவுக்கு புறப்பட்டுச் சென்ற கோஏர் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் லே விமான நிலையத்திற்கே திரும்பி வந்தது.
ஜம்மு:

டெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீரின் லே நகரம் வழியாக ஜம்மு நகருக்கு கோஏர் விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானம் இன்று காலை 9.20 மணிக்கு லே விமான நிலையத்தில் இருந்து ஜம்முவுக்கு புறப்பட்டது. அதில் 112 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்ததை விமானி கண்டறிந்தார்.

உடனே விமானத்தை லே விமான நிலையத்திற்கு திருப்பிய விமானி, விமானத்தை உடனடியாக தரையிறக்க அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்ததும் விமானம் தரையிறக்கப்பட்டு, அதில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட பழுது சரியான நேரத்தில் கண்டறியப்பட்டதால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.


இதையடுத்து டெல்லியில் இருந்து லே விமான நிலையத்திற்கு பொறியாளர்கள் குழு விரைந்தது. அவர்கள் விமானத்தை ஆய்வு செய்து, சரிசெய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர். எனவே, அந்த விமானம் நாளை தான் ஜம்மு நகருக்கு புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் வந்த பயணிகளுக்கு மாற்று பயண ஏற்பாடுகளை விமான நிறுவனம் செய்து வருகிறது. #Tamilnews

Similar News