செய்திகள்

காஷ்மீரில் மத்திய ரிசர்வ் படையினர் மீது கையெறி குண்டுவீச்சு: 2 வீரர்கள் உள்பட 4 பேர் காயம்

Published On 2018-02-04 03:00 IST   |   Update On 2018-02-04 03:00:00 IST
காஷ்மீரில் மத்திய ரிசர்வ் படையினர் மீது கையெறி குண்டு வீசியதில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலத்த காயமடைந்தனர். மேலும் பொதுமக்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.
ஸ்ரீநகர்:

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்துக்கு உட்பட்ட டிராலுக்கு அருகே, படாகுண்ட் என்ற பகுதியில் நேற்று பிற்பகல் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர்.பி.எப்.) ரோந்து பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் சிலர் அந்த வீரர்கள் மீது கையெறி குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பி ஓடினர்.

இந்த குண்டு வெடித்ததில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலத்த காயமடைந்தனர். மேலும் பொதுமக்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் பொதுமக்கள் பலர் காயமடைந்ததாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பு படையினரும், மாநில போலீசாரும் இணைந்து அப்பகுதியை சுற்றி வளைத்தனர். பின்னர் தப்பி ஓடிய பயங்கரவாதிகளை வேட்டையாடும் நோக்கில் அங்கு தீவிர தேடும் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசிய சம்பவம் தெற்கு காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Similar News