செய்திகள்

சசிதரூர் மனைவி மர்ம மரண விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணிய சாமி மேல்முறையீடு

Published On 2018-01-30 00:29 GMT   |   Update On 2018-01-30 00:29 GMT
முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்ம மரண விவகாரம் குறித்து பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி மேல்முறையீடு செய்தார். #SubramanianSwamy #SunandaPushkar
புதுடெல்லி:

முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 17-ந் தேதி, டெல்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அவரது மரணம் குறித்து கோர்ட்டு கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். ஆனால், அம்மனு கடந்த அக்டோபர் 26-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணிய சாமி மேல்முறையீடு செய்தார். அம்மனு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. நேரில் ஆஜரான சுப்பிரமணிய சாமி, “நான் மன்மோகன்சிங், ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஆஜராகி உள்ளேன்” என்று கூறினார்.



அதற்கு நீதிபதிகள், “இந்த குற்றச்சாட்டின் தகுதி குறித்து பார்ப்பதற்கு முன்பாக, இந்த மனுவின் முகாந்திரம் குறித்து நாங்கள் திருப்தி அடைவது அவசியம். ஆகவே, மனுவில் முகாந்திரம் பற்றி முதலில் வாதிடுங்கள்” என்று கூறி, 3 வாரங்களுக்கு மனுவை ஒத்தி வைத்தனர்.  #SubramanianSwamy #SunandaPushkar #tamilnews 
Tags:    

Similar News