செய்திகள்

உ.பி.யில் பள்ளி முதல்வர் மகன் செக்ஸ் தொல்லை - மாணவி தீக்குளித்து மரணம்

Published On 2018-01-29 13:20 IST   |   Update On 2018-01-29 13:20:00 IST
உத்தப்பிரதேச மாநிலத்தில் பள்ளி முதல்வர் மகன் செக்ஸ் தொல்லை கொடுத்ததால் 12-ஆம் வகுப்பு மாணவி மனவேதனையில் தீக்குளித்து உயிரிழந்தார்.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் டியோரியா என்ற இடத்தில் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு பிளஸ்-2 படித்து வந்த ஒரு மாணவியை பள்ளி முதல்வரின் மகன் பள்ளியில் உள்ள முதல்வரின் அறைக்கு வருமாறு அழைத்தார்.

அங்கு அவரை தவிர வேறு யாரும் இல்லை. அப்போது அந்த மாணவியிடம் செக்ஸ் தொல்லையில் ஈடுபட்டார். அதற்கு அந்த மாணவி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் கோபம் அடைந்த அவர் மாணவியை கடுமையாக மிரட்டினார். இந்த வி‌ஷயத்தை வெளியே சொன்னால் கடும் விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்தார்.

ஆனால் இந்த சம்பவம் நடந்ததை பள்ளிக்கு சென்றிருந்த பெற்றோர் ஒருவர் ஜன்னல் வழியாக பார்த்துவிட்டார். அவர் இதுபற்றி அந்த மாணவியின் அண்ணனிடம் சென்று கூறினார்.

உடனே மாணவியின் அண்ணன் பள்ளிக்கு சென்று பள்ளி முதல்வரின் மகனை தாக்கினார். மேலும் கடுமையாக எச்சரித்துவிட்டு வீடு திரும்பினார்.

இந்த நிலையில் பள்ளி முதல்வரின் மகன் தனது நண்பர்கள் சிலரை அழைத்துக் கொண்டு அந்த மாணவியின் வீட்டுக்கு சென்றார். அங்கு மாணவியின் அண்ணனை அடித்து உதைத்து தகராறு செய்தார்.

தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமல்லாமல் தனது அண்ணனையும் தாக்கியதால் மாணவி மனவேதனை அடைந்தார். வீட்டில் தனி அறையில் இருந்த அவர் திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதுசம்பந்தமாக போலீசார் பள்ளியின் முதல்வர், அவருடைய மகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனைவரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

Similar News