செய்திகள்

திராவக வீச்சில் பாதிக்கப்பட்டோருக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு - மத்திய அரசு உத்தரவு

Published On 2018-01-28 23:08 GMT   |   Update On 2018-01-29 00:02 GMT
செயல்திறன் குறைபாடு, அறிவுசார் குறைபாடு மற்றும் திராவக வீச்சில் பாதிக்கப்பட்டோருக்கு மத்திர அரசின் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:

செயல்திறன் குறைபாடு, அறிவுசார் குறைபாடு மற்றும் திராவக வீச்சில் பாதிக்கப்பட்டோருக்கு மத்திர அரசின் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் கடந்த 2005-ம் ஆண்டு வெளியிட்ட உத்தரவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது பார்வையின்மை அல்லது பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடு மற்றும் இடப்பெயர்வு குறைபாடு அல்லது பெருமூளை வாதம் போன்றவற்றுக்கு தலா 1 சதவீதம் என பிரிக்கப்பட்டு உள்ளது. இந்த இடஒதுக்கீட்டை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட நபர் குறிப்பிட்ட பிரிவில் 40 சதவீதத்துக்கு குறையாத ஊனத்தை பெற்றிருக்க வேண்டும்.

இந்த நிலையில் செயல் திறன்குறைபாடு, அறிவுசார் குறைபாடு மற்றும் திராவக வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் நோக்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு சதவீதத்தை உயர்த்தி மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016-ன் கீழ் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி மத்திய அரசின் நேரடி வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 3 சதவீத இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி பார்வையற்றவர்கள் அல்லது பார்வை குறைபாடு; காது கேளாமை அல்லது செவித்திறன் குறைபாடு; பெருமூளை வாதம், குணமடைந்த தொழுநோயாளி, குள்ளத்தன்மை, தசைநார் தேய்வு, திராவக வீச்சில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தசைநார் தேய்வு உள்ளிட்ட இடப்பெயர்வு குறைபாடு உள்ளவர்களுக்கு ஒவ்வொரு பணியிடத்திலும் தலா 1 சதவீதம் வழங்க வேண்டும்.

மேலும் செயல்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள், அறிவுசார் குறைபாடு, கற்றல் குறைபாடு மற்றும் மனநோயாளருக்கு 1 சதவீத ஒதுக்கீடும் வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசு துறைகளுக்கும் கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

இந்த புதிய விதிகளின்படி அனைத்து அரசு நிறுவனங்களும் குறைதீர் அதிகாரிகளை நியமிக்கவும், துறை தொடர்பான புகார்களுக்கு 2 மாதங்களுக்குள் தீர்வு காணவும் அரசு உத்தரவிட்டு உள்ளது. 
Tags:    

Similar News