செய்திகள்

பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 5.45 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு அனுமதி

Published On 2017-12-29 13:18 GMT   |   Update On 2017-12-29 13:19 GMT
பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 5.45 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நகர்புற வளர்ச்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது. #PradhanMantriAwasYojana #Houseforallscheme

புதுடெல்லி:

பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 5.45 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நகர்புற வளர்ச்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமரின் வீட்டுவசதி (பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா) திட்டத்தின் கீழ் 5 லட்சத்து 45 ஆயிரம் வீடுகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்புக் குழுவின் 29வது கூட்டத்திற்கு பின் மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 31 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீடுகளை கட்ட, மத்திய அரசு 8,107 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.



ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 1.42 லட்சம் வீடுகள், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1,20,645 வீடுகள், கர்நாடக மாநிலத்தில் 1,18,646 வீடுகள், மத்தியப்பிரதேச மாநிலத்தில் 1,00,341 வீடுகள், ஜார்கண்ட் மாநிலத்தில் 30,486 வீடுகள், சத்தீஷ்கர் மாநிலத்தில் 29,703 வீடுகள், அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் 2,822 வீடுகள் கட்ட மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. 

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், ஒரு பயனாளிக்கு 2.5 லட்சம் ரூபாய் வரை மத்திய அரசு வட்டி மானியம் அளித்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 37 லட்சத்து 43 ஆயிரம் பயனாளிகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு ஜீன் மாதம் தொடங்கப்பட்ட பிரதமரின் வீட்டுவசதி வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 2022-ம் ஆண்டிற்குள் அனைவருக்கு வீடு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 
Tags:    

Similar News