செய்திகள்
ஆந்திராவில் கோவில்களில் ஆங்கில புத்தாண்டை கொண்டாட தடை
மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றும் பெயரில் இந்திய கலாசாரம் புறக்கணிக்கப்படுவதால், ஆந்திர மாநிலத்தில் உள்ள கோவில்களில் ஆங்கில புத்தாண்டை கொண்டாட தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
அமராவதி:
இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி ஜனவரி 1-ந்தேதி அன்று கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்துவது வாடிக்கை.
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள கோவில்களில் ஆங்கில புத்தாண்டை கொண்டாட தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, மாநில அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் இந்து தர்ம பரிரக்ஷனா அறக்கட்டளை ஆந்திராவில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஆங்கில புத்தாண்டுக்கு வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வது மற்றும் அதனை ஒரு விழாவை போல கொண்டாடுவது ஆகியவை இந்தியாவின் வேத கலாசாரம் கிடையாது. தெலுங்கு வருடபிறப்புதான் பொருத்தமான, சிறந்த கலாசாரம் ஆகும். சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகியும் நாம் இன்னும் ஆங்கிலேய அரசால் தயார் செய்யப்பட்ட காலண்டர்களை தான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்காக கோவில்களை அலங்கரிக்க லட்சக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றும் பெயரில் இந்திய கலாசாரம் புறக்கணிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
எனினும் இந்த உத்தரவு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பொருந்தாது என ஆந்திர அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.