செய்திகள்

ஜன் லோக்பால் அமைக்க வலியுறுத்தி அடுத்த ஆண்டு போராட்டம் - அன்னா ஹசாரே அறிவிப்பு

Published On 2017-11-29 09:46 GMT   |   Update On 2017-11-29 09:47 GMT
ஜன் லோக்பால் அமைக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி முதல் போராட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
மும்பை:

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் வகையில் ஜன் லோக்பால் அமைப்பை கொண்டுவர வேண்டும் எனவும், விவசாயிகளின் நலன்கள் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தயாரிக்கப்பட்ட சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.



அவரது போராட்டத்துக்கு பெருத்த ஆதரவு கிடைத்தது. இதையடுத்து, ஜன் லோக்பால் அமைப்பு விரைவில் கொண்டு வரப்படும் என அப்போதைய மத்திய அரசு உறுதி அளித்ததால் அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட்டார். ஆனால் மத்திய அரசு ஜன் லோக்பால் அமைப்பை கொண்டு வரவில்லை.

அதன்பின்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலில், ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக ஜன் லோக்பால் அமைப்பை கொண்டு வருவோம்’’ என பா.ஜ.க. உறுதியளித்தது. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஜன் லோக்பால் அமைப்பை கொண்டு வரவில்லை.

இந்நிலையில், அன்னா ஹசாரே மராட்டிய மாநிலம் அக்மெத்நகர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

'ஜன் லோக்பால் அமைக்காதது குறித்து அமைதி போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த பிரச்சனை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியும் அவர் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 22 ஆண்டுகளில் இது வரை 12 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அந்த சமயத்தில் தற்கொலை செய்த தொழிலதிபர்களின் எண்ணிக்கை எனக்கு தெரிய வேண்டும்.

இது தொடர்பாக அடுத்த ஆண்டு தியாகிகள் தினமான மார்ச் 23 ஆம் தேதி போராட்டத்தை தொடங்கி வைக்க உள்ளேன்'.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News