செய்திகள்

உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

Published On 2017-11-02 05:33 IST   |   Update On 2017-11-02 05:33:00 IST
உத்தரபிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது. இதில், 25 பேர் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
லக்னோ:

உத்தரபிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது. இதில், 25 பேர் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உஞ்சாஹர் என்ற இடத்தில், தேசிய அனல்மின் நிலையத்தின் பெரோஸ் காந்தி மின் உற்பத்தி நிலையம் உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் திறக்கப்பட்ட அதில், மொத்தம் 1,550 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 6 மின் உலைகள் உள்ளன. அவற்றில், 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் உலை ஒன்றில் சோதனை ஓட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

அங்குள்ள பிரமாண்ட கொதிகலன் (பாய்லர்) நேற்று எதிர்பாராதவிதமாக, பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால், அந்த நேரத்தில் பணியில் இருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அலறி அடித்தபடி வெளியே ஓடினர். மின் நிலையத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது.



இந்த விபத்தில், 25 தொழிலாளர்கள் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தின்போது, சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆவர்.

அனல்மின் நிலையத்தில் சில உடல்கள் இன்னும் அப்புறப்படுத்தப்படவில்லை. காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால், சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாக கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த் குமார் தெரிவித்தார்.

பலியானவர்களின் உடல்கள், அடையாளம் கண்டறிய முடியாத அளவுக்கு கருகிவிட்டன. காயம் அடைந்தவர்களில் 4 அதிகாரிகளும் அடங்குவர்.

உடனடியாக மீட்புப்பணி தொடங்கியது. தேசிய பேரிடர் மீட்பு படை குழு, லக்னோவில் இருந்து சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தற்போது மொரீஷியஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். அவர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு முதன்மை உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்தபடியே, நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்.

மேலும், கிடைத்த ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் விபத்து பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கூடுதல் மாவட்ட கலெக்டரும், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டும் சம்பவ இடத்தில் முகாமிட்டு, மீட்பு பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்கள். தேசிய அனல்மின் நிலைய உயர் அதிகாரிகளும் அங்கு விரைந்தனர்.

அதிக அழுத்தம் காரணமாக, கொதிகலனின் கழிவு சாம்பல் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதாக மாவட்ட கலெக்டர் சஞ்சய் காத்ரி தெரிவித்தார்.

கொதிகலன் வெடித்த தகவல் அறிந்து, தொழிலாளர்களின் உறவினர்கள் பலர் அங்கு குவிந்தனர். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு என்ன ஆயிற்றோ என்று கவலையாக விசாரித்தனர். பதற்றமான சூழ்நிலை உருவானதால், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை ‘சீல்’ வைத்தனர்.

இச்சம்பவத்தில், பலியானோர் குடும்பங்களுக்கு யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.

பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 

Similar News