செய்திகள்

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு

Published On 2017-08-31 14:25 GMT   |   Update On 2017-08-31 14:36 GMT
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

நம் நாட்டில் வருமான வரித்துறை சார்பில் அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் அட்டைப் பெறலாம்.

இந்த நிலையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு முதலில் ஜூன் 30-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட்ட நிதி மசோதாவின் படி, வருமான வரி கணக்கு தாக்கலின் போது ஆதார் எண் குறிப்பிடப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்தக் காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுமை பெறவில்லை. அதேசமயம் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை நேரடி வரிவிதிப்பு கழகமும் நீட்டித்தது.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்டு 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இன்றுடன் இதற்கான காலக்கெடு முடிவடைவதாக இருந்த நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
Tags:    

Similar News