செய்திகள்

மும்பை கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு - பிரதமர் மோடி இரங்கல்

Published On 2017-08-31 12:49 GMT   |   Update On 2017-08-31 12:49 GMT
மும்பை கட்டிட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மும்பை:

மும்பையில் பெய்து வரும் பலத்த மழைக்கு தெற்கு மும்பையின் சவுகத் அலி ரோட்டில் பென்டிபஜாரில் உள்ள பழமையான 5 மாடி குடியிருப்பு ஒன்று இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. இதில் சிக்கி பலர் பலியாகினர். தகவலறிந்து மீட்பு படையினர் விரைந்து சென்றனர்.

இதுகுறித்து மீட்பு படையை சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், அடுக்குமாடி குடியிருப்பு விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்துள்ளனர்.



மும்பை கட்டிட விபத்து குறித்து அறிந்த பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது கேட்டு மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன். கட்டிடத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்' என பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, மராட்டிய மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News