செய்திகள்

சக்கரம் இல்லாமல் வானில் விமானம் பறக்காதா?: ஏர் இந்தியாவுக்கே வெளிச்சம்!

Published On 2017-07-26 12:44 IST   |   Update On 2017-07-26 12:45:00 IST
ஓடுபாதையில் ஏறி, இறங்க பயன்படுத்தும் சக்கரத்தை வெளியே காட்டியபடி பறந்த ஏர் இந்தியா விமானத்தை ஓட்டிய இரு பெண் விமானிகள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை:

ஆகாய விமானங்கள் ஓடுபாதை வழியாக ஊர்ந்து சென்று வானில் உயரக் கிளம்பவும், தரையிறங்கும் போதும் விமானத்தின் மையப்பகுதியில் டயர்களுடன் கூடிய சக்கரங்கள் உதவி வருகின்றன. தரையிறங்கும்போது ஓடுபாதைக்கு சில மீட்டர் தொலைவில் இந்த சக்கரத்தை வெளிப்படுத்த ‘லேன்டிங் கியர்’ எனப்படும் கருவியின் லீவர்-ஐ விமானிகள் இயக்குவதுண்டு.

அப்போது, விமானத்தின் வயிற்றுப் பகுதிக்குள் மறைந்திருக்கும் சக்கரங்கள் விமானத்துக்கு கால்களாக கீழே இறங்கி ஓடுபாதையில் தரையிறங்கி ஊர்ந்து சென்று நிறுத்துவதற்கு துணைபுரியும். பின்னர், சக்கரங்களுடன் நின்று இளைப்பாறிய பின்னர் அதே விமானம் மீண்டும் தனது பயணத்துக்காக புறப்படும்போது ஓடுபாதையில் ஊர்ந்து, வேகமெடுத்து வானில் உந்தி ஏறுவதற்கும் சக்கரங்கள் உதவிகரமாக உள்ளன.

விமானம் வானில் பறக்க தொடங்கியவுடன் சக்கரங்களை வயிற்றுப் பகுதியில் உள்வாங்கிக் கொள்ள ‘லேன்டிங் கியர்’ லீவர்-ஐ விமானிகள் மீண்டும் எதிர்விசையில் இயக்குவதுண்டு.

இந்நிலையில், கடந்த 22-ம் தேதி சுமார் 100 பயணிகளுடன் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு புறப்பட்டு சென்றது. ஓடுபாதையில் ஊர்ந்துச் சென்று வேகமெடுத்த விமானம் வானத்தில் நேராக நிலைகொண்டு பறந்தபோது, விமானத்தின் சக்கரங்களை உள்வாங்கும் ‘லேன்டிங் கியர்’ லீவர்-ஐ எதிர்விசையில் இயக்க விமானிகள் மறந்து விட்டனர்.

இதையடுத்து, வானத்தில்கூட சக்கரங்களின் உதவியுடன்தான் விமானம் பறக்கிறதோ..,? என்ற மாயையை தோற்றுவிக்கும் வகையில் பறந்து கொண்டிருந்த விமானத்தை உடனடியாக அருகாமையில் உள்ள நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறக்குமாறு கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பொதுவாக வானில் இருந்து தரையிறங்கும்போது ‘லேன்டிங் கியர்’ லீவர்-ஐ இயக்க மறந்து விட்டால் விமானியின் அறையில் உள்ள கம்ப்யூட்டர் திரையில் எச்சரிக்கை ஒலி எழும்பும். இதேபோல், உயரக் கிளம்பி வானில் நிலைகொண்ட பின்னர் சக்கரங்கள் வெளியே தெரியும் வகையில் பறந்தாலும் எச்சரிக்கை ஒலி எழும்பும்.

இந்நிலையில், பணியில் அஜாக்கிரத்தையாக இருந்தமைக்காக அந்த விமானத்தை ஓட்டிய இரு பெண் விமானிகள் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடைபெற்ற விசாரணை தொடர்பான அறிக்கை ஏர் இந்தியா நிறுவன உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, பறந்து செல்லும் விமானத்தின் வேகம் எதிர்காற்றின் விசையால் தடைபடாத வகையிலும், குறைபடாத வகையிலும் விமானத்தின் உடலமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிர்மாறாக வெளியே சக்கரங்கள் துறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு விமானம் பலநூறு கிலோமீட்டர் தூரத்துக்கு பறந்தால் அதிகமான எரிபொருள் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News