செய்திகள்

கர்நாடக மாநிலத்தில் வேற்று கிரக வாசிகளின் கால்தடம்

Published On 2017-07-11 18:37 IST   |   Update On 2017-07-11 18:37:00 IST
கர்நாடக மாநிலத்தில் வேற்று கிரகவாசிகள் புகுந்துவிட்டதாக வதந்தி பரவியது. இதைத்தொடர்ந்து கிராம மக்கள் வீட்டிற்குள் சென்று பதுங்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் காடக் மாவட்டத்தில் அந்துரு என்ற கிராமம் உள்ளது.

இங்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் ஏதோ மிகப்பெரிய விலங்கினம் மூச்சு விடுவது போன்ற சத்தத்தை கிராம மக்கள் கேட்டுள்ளனர். பின்னர் காலையில் எழுந்து கிராமத்தை சுற்றி வந்தபோது அங்கு ஒரு இடத்தில் கால் தடம் பதிந்து கிடந்ததை கண்டு கிராம மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

20 முதல் 30 அடி நீளத்தில் அந்த கால்தடம் பதிந்து இருந்தது. வேற்று கிரகவாசிகள் அந்த கிராத்தில் புகுந்துவிட்டதாக வதந்தி பரவியது. இதைத்தொடர்ந்து கிராம மக்கள் வீட்டிற்குள் சென்று பதுங்கிக் கொண்டனர்.

2 நாட்களாக கிராம மக்கள் வெளியே வரவில்லை. அந்த கிராமத்துக்கு வந்த வேறு ஒரு கிராம வாலிபர் இதுகுறித்து வனத்துறைக்கும் மற்ற கிராம மக்களுக்கும் தகவல் கொடுத்தார். பின்னர் சுற்று வட்டார மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்த கால்தடத்தை பார்த்து சென்றனர்.

இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறியதாவது:-

வேற்று கிரக வாசிகள் கிராமத்திற்குள் வந்துவிட்டதாக வதந்தி பரவியதால் பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தோம். 2 நாட்களாக வீட்டை வெளியே வரவில்லை. இரவு நேரத்தில் நடமாடவும் பயந்தோம். வயல்களுக்கும் செல்லவில்லை.

வனத்துறையினர் வந்து எங்களது பீதியை போக்கினர். அதன்பிறகு வீட்டை விட்டு வெளியே வந்தோம். சுற்று வடடார மக்கள் வந்து பார்த்ததால் அந்த கால்தடம் அழிந்துவிட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

வேற்று கிரக வாசிகள் கால் தடத்தை நாங்கள் பார்க்கவில்லை. அந்த கிராம மக்களை மிரட்டும் வகையில் யாரோ ஒருசிலர் கால்தடம் போன்று பதித்து வி‌ஷமச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

நாங்கள் கிராம மக்களுக்கு 2 நாட்கள் கவுன்சிலிங் கொடுத்தோம். 2 நாட்களாக இரவு - பகலும் அந்த கிராமத்தில் ரோந்து சுற்றி வந்தோம். தற்போது அந்த கிராமத்தில் பதட்டம் நீங்கிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News