செய்திகள்

பத்மநாபசாமி கோவிலின் பாதாள அறையை திறக்கும் விஷயத்தில் கோர்ட்டு சொல்வதை செய்வோம்: கேரள மந்திரி

Published On 2017-07-11 09:34 IST   |   Update On 2017-07-11 09:34:00 IST
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலின் பாதாள அறையை திறக்கும் விஷயத்தில், சுப்ரீம் கோர்ட்டு என்ன சொல்கிறதோ, அதை செய்வோம் என்று கேரள மந்திரி கூறினார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், பல நூற்றாண்டுகள் பழமையான பத்மநாபசாமி கோவில் உள்ளது. 18-ம் நூற்றாண்டின்போது, கேரளாவையும், தமிழ்நாட்டின் சில பகுதிகளையும் ஆண்ட திருவாங்கூர் சமஸ்தானம், அந்த கோவிலை பழமை மாறாமல் புதுப்பித்து கட்டியது.

1947-ம் ஆண்டு, திருவாங்கூர் சமஸ்தானம், இந்தியாவுடன் இணைந்தது. அதன்பிறகும், அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அறக்கட்டளையால் கோவில் நிர்வகிக்கப்பட்டது.

இதற்கிடையே, கோவிலில் முறைகேடுகள் நடப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அவ்வழக்கில் கோர்ட்டுக்கு உதவுபவராக நியமிக்கப்பட்ட மூத்த வக்கீல் கோபால் சுப்பிரமணியம், பொக்கிஷங்கள் வைக்கப்பட்ட ‘பி’ என்ற பாதாள அறையை திறக்க உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பித்தார்.

அந்த அறையை திறந்தால், உலகத்துக்கே ஆபத்து என்று தேவையற்ற பீதி கிளப்பப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதுபற்றி பின்னர் முடிவு செய்வதாக சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

இந்நிலையில், கேரள தேவசம் மந்திரி கடக்கம்பள்ளி சுரேந்திரன், நேற்று திருவனந்தபுரத்தில் திருவாங்கூர் அரச குடும்ப உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ‘பி’ பாதாள அறையை திறப்பது பற்றிய அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.

பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், “திருவாங்கூர் அரச குடும்பம், பாதாள அறையை திறப்பதற்கு எதிராக உள்ளது. மத சடங்குகளின்படி, அதற்கு கட்டுப்பாடுகள் இருப்பதாக தெரிவித்தது. இருப்பினும், இந்த விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டு என்ன முடிவு எடுத்தாலும் அதை நிறைவேற்றுவோம்” என்றார்.

இதுபோல், சுப்ரீம் கோர்ட்டு ஆலோசகர் கோபால் சுப்பிரமணியமும் விரைவில் அரச குடும்பத்தினரை சந்தித்து பேசுகிறார்.

இதற்கிடையே, அரச குடும்ப உறுப்பினரான ஆதித்ய வர்மா என்பவர் கூறியதாவது:-

கேரள மந்திரியுடன் நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தனிப்பட்ட முறையிலானது. பாதாள அறையை திறக்க கோர்ட்டு உத்தரவிட்டால், அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம். கடந்த 2002-ம் ஆண்டு, இதேபோல் பாதாள அறையை திறக்க முயற்சி நடந்தபோது, கோவில் தந்திரி ‘தேவ பிரஸ்னம்’ (ஜோதிட ஆராய்ச்சி) பார்த்துவிட்டு, அதை திறக்கக்கூடாது என்று கூறிவிட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News