செய்திகள்

தொல்லியல் துறை அருங்காட்சியகங்களில் ‘செல்பி ஸ்டிக்’குகளை எடுத்துச் செல்ல தடை

Published On 2017-07-06 03:16 IST   |   Update On 2017-07-06 03:16:00 IST
‘செல்பி’ ஸ்டிக்குகளை இந்திய அருங்காட்சியகங்களுக்குள் பார்வையாளர்கள் இனி எடுத்துச் செல்ல இயலாது. அதற்கு இந்திய தொல்லியல் துறை தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது.
புதுடெல்லி:

எந்த இடத்துக்கு சென்றாலும் அந்த இடத்தை பின்னணியாக வைத்து ‘செல்பி’ எடுத்துக் கொள்ளும் மோகம் இன்று அதிகரித்து வருகிறது. இன்னும் சிலர் தங்களது செல்போன்களுடன் நீண்ட ‘ஸ்டிக்’குகளை இணைத்து குழுவாகவும் செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.

இதுபோல் ஸ்டிக்குகளை இந்திய அருங்காட்சியகங்களுக்குள் பார்வையாளர்கள் இனி எடுத்துச் செல்ல இயலாது. அதற்கு இந்திய தொல்லியல் துறை தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது. மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தாஜ் அருங்காட்சியகம்(ஆக்ரா), இந்திய போர் நினைவு அருங்காட்சியகம்(டெல்லி), கொனார்க், ஹம்பி உள்ளிட்ட 46 அருங்காட்சியகங்களுக்கு இந்த தடை பொருந்தும்.

இதுபற்றி இந்திய தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அருங்காட்சியகங்களில் அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்ட பண்டைய கால சின்னஞ்சிறு கலைப்பொருட்கள் பெரும் அளவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. இவை பாரம்பரியத்தை வெளிப்படுத்துபவை. விலை மதிப்பு மிக்கவை. இதுபோன்ற கலைப்பொருட்களின் அருகில் நின்று செல்பி ஸ்டிக்குகளை பொருத்தி படம் எடுக்கும்போது அந்த அரிய பொருட்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.

எனவே நாடு முழுவதும் அனைத்து அருங்காட்சியகங்களிலும் கலைப்பொருட்களை பாதுகாக்கும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய தொல்லியல் துறை அருங்காட்சியக கொள்கையின்படி செல்பி ஸ்டிக்குகளை அருங்காட்சியக வளாகங்களுக்குள் எடுத்துச் செல்வதற்கு முற்றிலும் அனுமதி கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News