செய்திகள்

300 ரூபாய் கட்டண தரிசனத்தில் மாற்றம் இல்லை: திருப்பதி தேவஸ்தானம் தகவல்

Published On 2017-07-03 04:59 GMT   |   Update On 2017-07-03 04:59 GMT
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தேவஸ்தானம் சார்பில் வலியுறுத்தி ஜி.எஸ்.டி.வரியில் இருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை ரூ.300 தரிசன டிக்கெட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி:

ஜி.எஸ்.டி.வரி விதிப்பில் இருந்து திருப்பதி தேவஸ்தானம் தப்பவில்லை. திருப்பதி லட்டு, தங்கும் விடுதி, தரிசன டிக்கெட்டுக்களுக்கும் ஜி.எஸ்.டி.வரிக்கு உட்படுத்தப்பட்டது. இதற்கு விலக்கு கோரி திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. அதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் ஜி.எஸ்.டி. மசோதா அமலுக்கு வந்தது. இதனால், திருப்பதியில் 300 ரூபாய் கட்டண தரிசனத்தில் கட்டண உயர்வு இருக்கும் என பக்தர்கள் எதிர்பார்த்தனர் ஆனால், எந்த கட்டண உயர்வு இன்றி பழைய கட்டணத்திலேயே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதுகுறித்து, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஏற்கனவே மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

வருகிற ஆகஸ்ட் 5-ந் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் இதே கோரிக்கை தேவஸ்தானம் சார்பில் வலியுறுத்தி ஜி.எஸ்.டி.வரியில் இருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை ரூ.300 தரிசன டிக்கெட்டில் எந்த மாற்றமும் இருக்காது’ என்றனர்.
Tags:    

Similar News