செய்திகள்

கர்நாடகத்தில் 3,515 மதுபான கடைகள் மூடப்பட்டன: கலால்துறை தகவல்

Published On 2017-07-03 03:49 GMT   |   Update On 2017-07-03 03:49 GMT
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கர்நாடக மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 3,515 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதாக மத்திய கலால்துறை கூறியுள்ளது.
பெங்களூரு:

நாட்டில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் நீளத்திற்குள் உள்ள மதுபான கடைகளை ஜூன் 30-ந் தேதிக்குள் மூடும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கர்நாடகம் முழுவதும் இந்த பகுதிகளில் 3,515 மதுபான கடைகள் இருப்பதை மாநில அரசு அடையாளம் கண்டது.

சுப்ரீம் கோர்ட்டு விதித்த காலக்கெடுவின்படி இந்த 3,515 மதுபான கடைகளையும் மூடிவிட்டதாக கர்நாடக அரசின் கலால் துறை கூறியுள்ளது. அந்த கடைகளில் 14.6 லட்சம் மதுபான பாட்டில்கள் அடங்கிய பெட்டிகள் உள்ளதாக கலால் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை நீட்டிக்காவிட்டால், அரசுக்கு வரும் வருவாய் இழப்பு ஏற்படும்.

கர்நாடக அரசு, கலால் துறை மூலம் நடப்பு ஆண்டில் ரூ.18 ஆயிரத்து 50 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்து உள்ளது. இவ்வளவு கடைகள் மூடப்பட்டுள்ளதால், மாநில அரசு தனது இலக்கை அடைவது கடினம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ள 500 மீட்டருக்கு அப்பால் கடைகளை திறக்க அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மாநில அரசு 3 மாத காலஅவகாசம் கொடுத்துள்ளது.

பெங்களூருவில் எம்.ஜி.ரோடு, மைசூரு ரோடு, ஒசூர் ரோடு, பழைய மெட்ராஸ் ரோடு, பிரிகேட் ரோடு, துமகூரு ரோடு, கனகபுரா ரோட்டில் இருந்த மொத்தம் 741 மதுபான விடுதிகள் மூடப்பட்டன. இந்த மதுபான விடுதிகளில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த ரோடுகள் வருவாய்த்துறை ஆவணங்களில் நெடுஞ்சாலைகள் என்று கூறப்பட்டுள்ளன. அதனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அந்த மதுபான விடுதிகள் மூடப்பட்டன.
Tags:    

Similar News