செய்திகள்

செப்டம்பர் முதல் அரசு அலுவலகங்களில் மட்டுமே ஆதார் பதிவு மையம் செயல்படும்: புதிய அறிவிப்பு

Published On 2017-07-02 06:11 GMT   |   Update On 2017-07-02 06:18 GMT
தனியார் மையங்கள் மூலம் ஆதார் அட்டைகள் பதிவு செய்யப்பட்டுவந்த நிலையில், செப்டம்பர் முதல் அரசு அலுவலக வளாகங்களில் மட்டுமே ஆதார் மையம் செயல்படும் என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது குடிமக்களின் தனிப்பட்ட அடையாளங்களை சேகரித்து ஒரே அடையாள அட்டையாக ஆதார் எனும்
அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதற்கென தனி ஆணையமும் அமைக்கப்பட்டது. தற்போது, அரசின் அனைத்து விதமான சேவைகளையும் குடிமக்கள் பெற கிட்டத்தட்ட ஆதார் அட்டை கட்டாயம் என்ற நிலை உள்ளது.

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது ஆதார் அட்டைக்கு விண்னப்பிக்கும் குடிமக்களின் தகவல்களை பெறுவதற்கான இ-சேவை மையங்களை நாடு முழுவதும் அமைத்துள்ளது. பெரும்பாலான மையங்கள் தாலுகா மற்றும் ஆட்சியர் அலுவலக வளாகங்களில் அமைக்கப்பட்டிருந்தாலும், மக்களுக்கு விரைவாக ஆதார் அட்டை அளிக்க வேண்டும் என்பதற்காக பல தனியார் மையங்களும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளன.

சுமார் 25000 மையங்கள் ஆதார் ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்த நிலையில், தனியார் வசமுள்ள மையங்களை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மூடி விட்டு அனைத்து மையங்களையும் அரசு அலுவலக வளாகத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆதார் ஆணையத்தின் சி.இ.ஓ அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்.

வரும் காலங்களில் வங்கிகள், மருத்துவமனைகள், தாலுகா அலுவலகங்கள் போன்றவற்றில் இம்மையங்கள் இயங்கவும், பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், புதிய பான் கார்டு, ஜி.எஸ்.டி போன்ற பணிகளை ஆதார் மையத்திலேயே மேற்கொள்ள தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News