செய்திகள்

கேரளாவில் வெளிநாட்டுக்காரரிடம் ரூ.82.35 லட்சம் இங்கிலாந்து பணம் பறிமுதல்

Published On 2017-06-19 12:10 IST   |   Update On 2017-06-19 12:10:00 IST
கேரளாவில் உள்ள அமரவிளை சோதனை சாவடியில் வெளிநாட்டுக்காரரிடம் இருந்து ரூ.82.35 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர், அவைக் கள்ளநோட்டுக்களா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:

பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நேற்று ஒரு சுற்றுலா பஸ் சென்றது. கேரள மாநில எல்லையில் உள்ள அமரவிளை சோதனை சாவடியில் அந்த பஸ்சை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் வெளிநாட்டை சேர்ந்த ரோப் எடிசன் (வயது 42) என்பவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் ஒரு ரகசிய லாக்கர் இருப்பதை கண்டுபிடித்தனர். அதை திறந்து பார்த்த போது கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் இருந்தது.

அதனை அதிகாரிகள் கைப்பற்றி பரிசோதித்தனர். அந்த பணம் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கரன் சியாகும். இந்திய மதிப்பில் அது ரூ.82.35 லட்சம் ஆகும். அந்த பணத்தை அவர் எங்கிருந்து கொண்டு வந்தார்? யாருக்காக எடுத்து சென்றார்? என்பது பற்றி ரோப் எடிசன் கூற மறுத்தார்.

இதை அடுத்து அவரிடம் இருந்த வெளிநாட்டு பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து அமரவிளை சோதனை சாவடியில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரோப் எடிசன் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவரிடம் இருந்தது வெளிநாட்டு கள்ளநோட்டுக்களா, என்ற சந்தேகமும் அதிகாரிகளுக்கு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய உளவு பிரிவுக்கும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்த பின்னர்தான் இது பற்றிய முழுவிபரமும் தெரியவரும் என அமரவிளை சோதனை சாவடி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News