செய்திகள்

கோட்சே விழாவில் பங்கேற்க வந்த சாமியார் மீது சரமாரி தாக்குதல்

Published On 2017-05-23 06:20 IST   |   Update On 2017-05-23 06:20:00 IST
டெல்லியில் நாதுராம் கோட்சேவின் பிறந்த நாள் விழாவுக்கு வந்த சாமியார் ஓம் மீது பொதுமக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
புதுடெல்லி:

டெல்லியில் நாதுராம் கோட்சேவின் பிறந்த நாள் விழாவுக்கு சிலர் ஏற்பாடு செய்து இருந்தனர். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க சுவாமி ஓம் என்ற சாமியார் வந்திருந்தார்.

அப்போது அங்கு இருந்த பெண் ஒருவர் சுவாமி ஓம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பொது இடங்களில் பெண்களை கீழ்த்தரமாக விமர்சித்து வரும் அவர் வெளியேற வேண்டும் என்று கூச்சலிட்டார். உடனே அங்கிருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அந்த பெண்ணை சமாதானப்படுத்த முயன்றனர்.

நடிகை ஒருவருக்கு அரை நிர்வாணமாக சாமியார் யோகா கற்றுக்கொடுக்க முயன்றார் என அந்த பெண் குற்றம் சாட்டினார். இதை கேட்ட அங்கிருந்த சிலர் அந்த பெண்ணுடன் சேர்ந்து சாமியாருக்கு எதிராக குரல் கொடுத்தனர். இதையடுத்து வேறுவழியின்றி அந்த சாமியார் அங்கிருந்து புறப்பட்டார். அப்போது ஆத்திரத்தில் இருந்த சிலர் அந்த சாமியாரை சரமாரியாக தாக்கினர். இதில் அந்த சாமியார் தலையில் இருந்த ‘விக்’ கழன்று வந்தது. இதை கண்ட அங்கிருந்தவர்கள் மேலும் அந்த சாமியாரை அடித்து உதைத்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சாமியாருடன் வந்தவர்கள் அவரை பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்து சென்றனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுவாமி ஓம் ஏற்கனவே ‘பிக்பாஸ்’ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News