செய்திகள்

மணிப்பூரைச் சேர்ந்த இரோம் ஷர்மிளாவுக்கு தமிழ்நாட்டில் திருமணம்

Published On 2017-05-08 13:38 IST   |   Update On 2017-05-08 13:39:00 IST
இரோம் ‌ஷர்மிளா தனது நீண்ட கால காதலரான டெஸ்ட்மான்ட் கெடின்கோவை திருமணம் செய்ய முடிவு செய்து உள்ளார். இவர்களது திருமணம் தமிழ்நாட்டில் ஜூலை கடைசி வாரத்தில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இம்பால்:

மணிப்பூரைச் சேர்ந்த இரும்பு பெண்மணி இரோம் சானு ‌ஷர்மிளா.

போராளியான இவர் சர்ச்சைக்குரிய ஆயுதப் படை (சிறப்பு அதிகாரம்) சட்டத்துக்கு எதிராக 16 ஆண்டு காலம் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

2000-ம் ஆண்டு நவம்பர் 2-ந்தேதியில் இருந்து 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ந்தேதி வரை அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

சமீபத்தில் நடந்த மணிப்பூர் சட்டசபை தேர்தலில் இரோம் ‌ஷர்மிளா தனிக்கட்சி தொடங்கி போட்டியிட்டார். முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான இபோபி சிங்குக்கு எதிராக களத்தில் குதித்து தோல்வி அடைந்தார். அவர் 90 ஓட்டுகளே பெற்றார்.

தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் இரோம் ‌ஷர்மிளா கடும் அதிருப்தி அடைந்தார்.

இந்த நிலையில் இரோம் ‌ஷர்மிளா தனது நீண்ட கால காதலரான டெஸ்ட்மான்ட் கெடின்கோவை திருமணம் செய்ய முடிவு செய்து உள்ளார்.


இரோம் சானு ‌ஷர்மிளா- டெஸ்ட்மாண்ட் திருமணம் தமிழ்நாட்டில் ஜூலை கடைசி வாரத்தில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருமணத்துக்கு பிறகு அவர் தமிழ்நாட்டிலேயே குடியேற போவதாகவும் கூறப்படுகிறது.

திருமணத்துக்கு பிறகும் தனது போராட்டம் தொடரும் என்றும், எதிர் காலத்தில் தேர்தலில் போட்டியிட மாட்டேன். நான் அரசியல்வாதி அல்ல என்றும், போராளிதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

இரோம் ‌ஷர்மிளாவை மணக்க இருக்கும் டெஸ்ட் மான்ட் எப்படி அவருக்கு அறிமுகம் ஆனார் என்பது பற்றிய விவரம்:-

2009-ம் ஆண்டு இரோம்‌ ஷர்மிளா பற்றி ‘பர்னிங் பிரிட்ஜ்’ என்ற புத்தகம் வெளியானது. இதை படித்த இங்கிலாந்தை சேர்ந்த டெஸ்ட்மான்ட் அவரது போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் ‌ஷர்மிளாவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இருவருக்கும் நல்ல நட்பு மலர்ந்தது.

2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா வந்த டெஸ்ட்மான்ட் இம்பாலில் இரோம் ‌ஷர்மிளாவை முதல் முறையாக சந்தித்தார். அவர்களது நட்பு காதலாக மாறியது.

இருவரும் இங்கிலாந்தில் திருமணம் செய்ய முதலில் திட்டமிட்டு இருந்தனர். இரோமுக்கு பாஸ்போர்ட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால் இந்த முடிவு கைவிடப்பட்டது. தற்போது இருவரும் விரைவில் தமிழ்நாட்டில் திருமணம் செய்ய உள்ளனர்.

Similar News