செய்திகள்

கடலில் மூழ்கிய பாகிஸ்தான் வீரர்களை மீட்ட இந்தியா: கைமாறாக 63 இந்திய மீனவர்கள் விடுதலை

Published On 2017-04-12 13:00 GMT   |   Update On 2017-04-12 13:00 GMT
சர்வதேச கடல் எல்லையில் மூழ்கிய பாகிஸ்தான் கடற்படையின் 2 வீரர்களை உயிருடன் மீட்ட இந்திய கடலோரக் காவல் படையினர், அவர்களை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தனர். அதற்கு கைமாறாக இந்திய மீனவர்கள் 63 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
மும்பை:

பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு ஏஜென்சியை சேர்ந்த படகு ஒன்று காணாமல் போனது. இது தொடர்பாக இந்திய கடலோரக் காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குஜராத் கடலோர போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

6 பேர் பயணம் செய்த அந்த படகு நடுக்கடலில் மூழ்கியது. இதனையடுத்து இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் மூழ்கிய பாகிஸ்தான் படகில் இருந்து இருவரை உயிரோடு மீட்டனர். அதோடு, 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.



சர்வதேச எல்லைப் பகுதியில் இருந்து இந்திய பகுதிக்குள் சுமார் 10 நாட்டிக்கல் மைல்கள் தொலைவில் இந்த சம்பவம் நடைபெற்றது. பின்னர் மீட்கப்பட்ட இரண்டு பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் மற்றும் 4 பேரின் சடலங்களை இந்தியா பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது.

இந்நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு கைமாறு செய்யும் வகையில் இந்தியாவின் 10 படகுகளையும், 63 மீனவர்களையும் பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது.



“பாகிஸ்தான் கடற்படையைச் சேர்ந்த படகு ஒன்று கட்டுப்பாட்டை மீறி இந்திய கடல் எல்லைக்குள் வேகமாக சீறிப் பாய்ந்து வந்தது. அந்த பகுதியில் இந்தியாவைச் சார்ந்த 7 படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். பாகிஸ்தான் படகு வேகமாக வந்து மோதியதில் இந்திய படகு ஒன்று சேதமடைந்தது. மேலும் பாகிஸ்தான் படகும் மூழ்கியது” என்று இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News