செய்திகள்

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை: மத்திய அரசு அறிவிப்பு

Published On 2017-04-11 14:00 GMT   |   Update On 2017-04-11 14:00 GMT
தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

தேசிய வங்கிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த மாதம் 14–ந் தேதி முதல் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொது விதமாக போராடி வருகின்றன.

போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை அரசியல் தலைவர்கள், வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இன்று 29–வது நாளாக விவசாயிகளின் போராட்டம் நீடித்து வருகிறது. இன்று மண் சோறு சாப்பிடும் போராட்டம் நடத்தினர்.


இந்நிலையில் விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவுமில்லை என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதால், கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் உள்ளதா? என பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி சந்தோஷ் குமாரி கங்வார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், ‘விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை. எனினும், விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தார்.

Similar News