செய்திகள்

மக்கள் நல திட்டங்களுக்கு இளைஞர்களை தூதர்களாக ஆக்க வேண்டும்: மோடி வேண்டுகோள்

Published On 2017-03-16 17:07 GMT   |   Update On 2017-03-16 17:07 GMT
மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களுக்கு இளைஞர்களை தூதர்கள் ஆக்கவேண்டும் என்று பா.ஜனதா தலைவர்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டு உள்ளார்.
புதுடெல்லி:

சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்களில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்றது. கோவா, மணிப்பூர் மாநிலங்களில் பிற கட்சிகளின் ஆதரவுடன் பாரதீய ஜனதா ஆட்சியை பிடித்து இருக்கிறது. 5 மாநில தேர்தல் முடிவு வெளியான பிறகு முதன் முதலாக பாராளுமன்ற பாரதீய ஜனதா கட்சியின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

கூட்டத்தில், 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு அளித்த வாக்காளர்களுக்கும் மற்றும் பிரதமர் மோடி, கட்சியின் தலைவர் அமித்ஷா ஆகியோரின் தலைமையில் பாரதீய ஜனதாவின் வெற்றிக்கு பாடுபட்ட தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிதாக அமைந்துள்ள பாரதீய ஜனதா அரசுகள் சிறந்த நிர்வாகத்தை வழங்கி மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது. கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், பாரதீய ஜனதா தலைவர்கள் மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை இளைஞர்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்த வகையில், மக்கள் நல திட்டங்களுக்கு இளைஞர்களை தூதர்களாக ஆக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அத்துடன், ‘பீம்’ செயலியை பயன்படுத்தி மின்னணு பணபரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் மக்களிடம் பிரசாரம் மேற்கொள்ளவேண்டும் என்று கூறியதோடு, அம்பேத்கர் நாட்டுக்கு ஆற்றிய பணிகளையும், சேவைகளையும் பற்றி மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மத்தியில் பாரதீய ஜனதா அரசு பதவி ஏற்று 3 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, எம்.பி.க்கள் தங்கள் யோசனைகளை தெரிவிக்கவேண்டும் என்றும், மக்களிடம் சென்று மத்திய அரசின் நல திட்டங்களை தெரிவிக்கவேண்டும் என்றும், வாக்குச்சாவடி அளவில் இருந்தே கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டார்.

Similar News