செய்திகள்

நதிநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்ப்பாயம்: மக்களவையில் மசோதா தாக்கல்

Published On 2017-03-14 15:04 GMT   |   Update On 2017-03-14 15:04 GMT
மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்ப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் நிரந்தர தீர்ப்பாயம் அமைக்க வகை செய்யும் மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பிரச்சினைகள் தொடர்பான விசாரிக்க பல்வேறு தீர்ப்பாயங்கள் உள்ள நிலையில், பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் நிரந்தர தீர்ப்பாயம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், நதிநீர் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்ப்பாயம் அமைக்க அனுமதி கோரும் சட்ட மசோதா மக்கவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை நீர்வளத்துறை மந்திரி உமா பாரதி தாக்கல் செய்தார்.


இந்த மசோதா மிகவும் தவறாக தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், மசோதாவை கொண்டு வருவதற்கு முன் மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் பிஜு ஜனதா தளம் உறுப்பினர் பார்த்ருரி மகதாப் வலியுறுத்தினார்.

அவரது கருத்தை ஏற்க மறுத்த மந்திரி உமா பாரதி, இந்த மசோதா புரட்சிகரமான மசோதா என்றும், மாநிலங்களின் குறைகளை விரைவாக தீர்க்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் கூறினார். மேலும், இந்த மசோதாவை பரிசீலனை செய்ய வேண்டும் என்பதற்கு உறுப்பினர் மகதாப், தர்க்க ரீதியான காரணங்களை தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

“கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் இடையிலான காவேரி பிரச்சனை போன்ற பிரச்சினைகளை கையாள இந்த புதிய சட்டம் பயனுள்ளதாக இருக்கும். பல்வேறு தீர்ப்பாயங்களுக்குப் பதிலாக பல்வேறு அமர்வுகளைக் கொண்ட ஒற்றைத் தீர்ப்பாயம் அமைப்பதற்கு இந்த மசோதா வகை செய்கிறது. தீர்ப்பாயத்திற்கு ஒரு தலைவர் மற்றும் துணை தலைவர் மற்றும் அதிகபட்சம் 6 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள்.

தண்ணீர் பிரச்சனை வழக்கினை அதிகபட்சம் நான்கரை ஆண்டுகளுக்குள் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என காலக்கெடு விதிக்கப்படும். இந்த தீர்ப்பாயத்தின் அமர்வு அளிக்கும் தீர்ப்பே இறுதியானது. எனவே, இந்த சிறப்பு வாய்ந்த மசோதா நிறைவேற அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளிக்க வேண்டும்” என்றும் உமாபாரதி கேட்டுக்கொண்டார்.

Similar News