செய்திகள்

டெல்லியில் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக தளவாய் சுந்தரம் பதவியேற்பு

Published On 2017-03-12 03:26 IST   |   Update On 2017-03-12 03:26:00 IST
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் தமிழ்நாடு இல்லத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக பதவியேற்றுக் கொண்டார்.
புதுடெல்லி:

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவர் டெல்லியில், தமிழ்நாடு இல்லத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு இல்ல முதன்மை ஆணையர்கள் ஜஸ்பீர்சிங் பஜாஜ், என்.முருகானந்தம் மற்றும் கே.காமராஜ் எம்.பி., முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் தளவாய் சுந்தரம் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக எனது பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்படுவேன். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பிரதமர் மற்றும் மந்திரிகளை சந்தித்து தமிழகத்துக்கு மத்திய அரசு விடுவிக்க வேண்டிய நிதி மற்றும் செயல்படுத்த வேண்டிய பல்வேறு திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுக்களை அளித்தார்.

முதல்-அமைச்சரின் ஆலோசனையை பெற்று இந்த பணிகளை விரைவாக முடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நான் மேற்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Similar News