செய்திகள்

கேரளாவில் பெண்கள் பகலில் கூட நடமாட முடியவில்லை: குஷ்பு கடும் தாக்கு

Published On 2017-03-02 16:50 IST   |   Update On 2017-03-02 16:50:00 IST
கேரளாவில் நடிகையை கடத்தி பாலியல் கொடுமை செய்துள்ளனர். அந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக பினராய் விஜயன் செயல்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது என குஷ்பு பேசினார்.
பிரபல நடிகை பாவனா படப்பிடிப்பு முடிந்து காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தபோது காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக முக்கிய குற்றவாளியான சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து கேரளாவில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்பட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாவனா மீதான பாலியல் கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து கேரளத்தை காப்பதற்கான போராட்டம் என்ற பெயரில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, காங்கிரஸ் மாநில தலைவர் சுதீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

கேரளாவில் பெண்கள் மீதான தாக்குதல்கள், கற்பழிப்புகள், பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து விட்டது. இதற்கு காரணம் குற்றவாளிகளுக்கு கேரள அரசு துணை போவது தான். நள்ளிரவில் ஒரு பெண் நடந்து செல்வது தான் நமக்கு முழு சுதந்திரம் கிடைத்தற்கான அர்த்தம் என்று காந்தி கூறி உள்ளார்.

ஆனால் கேரளாவில் பகலில் கூட நடமாட முடியாத நிலை உள்ளது. பினராய் ஆளும் கேரளம் கொடும் கிரிமினல்கள், குற்றவாளிகள் ஆளும் கேரளாவாக மாறி உள்ளது. எந்தவொரு இடத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆளும் மாநில அரசே குற்றவாளிகளுக்கு உறுதுணையாக உள்ளது

இதனால் கிரிமினல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த காங்கிரஸ் கட்சியின் 5 ஆண்டு கால ஆட்சியில் உம்மன்சாண்டியின் திறமையான ஆட்சியால் மக்கள் நிம்மதியாகவும், சந்தோ‌ஷமாகவும் இருந்தனர். இரவிலும், பகலிலும் பெண்கள் தைரியமாக நடமாடும் நிலை இருந்தது. ஆனால் தற்போது பினராய் விஜயனின் 8 மாத ஆட்சியில் அரசியல் கொலைகள், பெண்கள் மீதான கற்பழிப்புகள் அதிகரித்து விட்டது. வயது வரம்பில்லாமல் பெண்கள் சீரழிக்கப்படுகிறார்கள்.

கம்யூனிஸ்டு ஆட்சிக்கு வந்த பிறகு பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட எந்தவொரு பெண்ணின் வழக்கிலாவது குற்றவாளிகளை கைது செய்தது உண்டா? நாட்டில் முன்னோடியாக நடிகர், நடிகைகள் செயல்பட்டு வருகிறார்கள். மனிதனின் வாழ்க்கையை நடித்து காட்டுவது தான் சினிமா.


சினிமா பார்த்து யாரும் கெட்டுப்போவதில்லை. கேரளாவில் திருமணம் ஆகாத இளம் நடிகையை கடத்தி பாலியல் கொடுமை செய்துள்ளனர். அந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக பினராய் விஜயன் செயல்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட அந்த நடிகை துணிச்சலாக தனக்கு நேர்ந்த கொடுமையை அவர் வெளியில் கொண்டு வந்துள்ளார். அவர் அந்த பாதிப்பில் இருந்து நிச்சயம் மீண்டு வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News